பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
73

காற்றிலசையும் பூங்கொடி, ஆற்றில் அளையும் மீன், ஊற்றில் புரளும் சிற்றலை என்று பெண்களைப்பற்றி மென்மையாக வருணித்து மகிழ்ந்த புலவரினம், வீராங்கனைகளைப் பற்றியும், வாயாரப் புகழ்ந்து வருணித்த குறிப்புக்களும் சரித்திரத்தில் உள்ளனவே.

சரிபாதியும் சக்தியும்

நிறைவான சமுதாயத்தை நிறுவ நினைக்கும் அறிஞர்கள், சரியாகத் திகழும் மாதர் குலத்தை சக்தியுள்ளதாக ஆக்கினால் தான், வருங்கால சமுதாயம் வளமுள்ளதாக, வலிமையுள்ளதாக மாறும் என்கிறார்கள்.

பெண்கள் விளையாடுகிறார்கள், பொலிவு பெறுகின்றார்கள், புதுமைதனைப் படைக்கின்றார்கள் என்பனவெல்லாம் இன்று நடைமுறையில் காணும்போது, நல்ல தோர் எதிர்காலம் நயமாகக் காத்திருக்கிறது என்றே உணர்கிறோம்.

ஆய கலைகள் அத்தனையிலும் ஈடுபட்டுள்ள தாய்க் (குலம், தூயகலையாம் விளையாட்டுக்களிலும் தீவிரம் கொண்டால், நாடும் நலமார்ந்த வீடும், பீடுநடையல்லவா போடும்!

நல்லதையே நினைப்போம். நல்லதே நடக்கும். அதுதானே நாம் விரும்பும் உண்மையும் உரிமையும்!