பக்கம்:விளையும் பயிர்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விளையும் பயிர்


கவிகளைப் பாடியிருக்கிறார். "ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே" என்ற பாட்டை நீங்கள் கேட்டிருப்பீர்களே! "ஆனந்த சுதந்தரம் அடைந்து விட்டோமென்று” என்ற பாட்டை முன்பே பாடிவிட்டார். இப்படிப் பின்னாலே வருவதை முன் கூட்டியே தெரிந்துகொண்டு சொல்பவர்களைத் தீர்க்கதரிசிகள் என்று சொல்வார்கள். நம்முடைய பாரதியார் சிறந்த தீர்க்கதரிசி. அதனால்தான் 1947-ஆம் வருஷம் சுதந்தரம் வந்தபோது, புதிய பாட்டைப் பாடிக்கொண்டு திண்டாடாமல் அற்புதமான பாட்டு ஒன்றை முன்பே பாடித் தந்திருக்கிறார். புதிய பாட்டை யாராவது பாடினால்தான் என்ன? அவர் பாட்டு மாதிரி இருக்க முடியுமா?

பாரதியார் எட்டையபுரத்தில் 1882-ஆம் வருஷம் நவம்பர் மாதம் பிறந்தார். அவருடைய தகப்பனார் சின்னசாமி ஐயர் தாயார் லக்ஷ்மி அம்மாள். எட்டையபுரம் ஒரு சிறிய சமஸ்தானம். அதில் உள்ள ஜமீன்தாரை ஊர்க்காரர்கள் ராஜா என்று சொல்வார்கள். பெரிய ராஜாவாக இல்லாவிட்டாலும் குட்டி ராஜாவுக்கு ஏற்றபடி சின்னச் சின்ன ஆடம்பரமெல்லாம் இருக்கும். அரண்மனைகூட உண்டு. வெறும் பணக்காரராக இருந்தால் அவர் வீட்டை மாளிகை என்று சொல்லலாம் ; பங்களா என்று சொல்லலாம்; வசிக்கிறவர் ராஜாவானால் அந்த மாளிகை அரண்மனை ஆகிவிடாதா?

சின்னசாமி ஐயருக்கு அரண்மனையில் உத்தியோகம். நல்ல அறிவாளி. கணக்கில் புலி. எந்த யந்திரமானாலும் ஒடித்துப் பார்ப்பார்; முடுக்கிச் சேர்த்துப் பார்ப்பார். துறு துறுத்த கை துறு துறுத்த புத்தி. அவருக்குப் பிள்ளையாகப் பிறந்த சுப்பிரமணிய பாரதியாருக்கோ கணக்கென்றால் வேப்பங்காய். ஐந்து வயசிலேயே அம்மாவை இழந்தார் பாரதியார். அவர் தகப்பனார் தாயில்லாக் குழந்தையிடம் அதிக அன்போடிருந்தார். அவரே படிப்புச் சொல்லித்தந்தார். தாயுமானவர் பாட்டு, கம்பராமாயணம், திருக்குறள் எல்லாவற்றையும் சொல்லித் தந்தார். தமக்குப் பிரியமான கணக்கைக் கூடச் சொல்லித்தந்தார். பாரதியாருக்குக் கணக்கு வந்தால்தானே? கணக்குக்குரிய வாய்பாட்டிலே அவர் மனசு செல்லாது. ஆனால் கவிதைக்குரிய வாய்பாட்டிலே ஊன்றி நிற்பார். "கணக்குப் போட வாடா" என்று அப்பா அழைப்பார். "கணக்கு - பிணக்கு - வணக்கு - மணக்கு - ஆமணக்கு" என்று எதுகை


36