பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர. சண்முகனார்

7



விலங்குகளைப் போல் மரச் செறிவுகளிலும் மலைக் குகைகளிலும் வாழ்ந்த மனிதன், நான்கு கால்கள் நட்டு மேலே தழைகளைப் பரப்பிக் குடில் அமைத்துக் கொண்ட போதே அறிவியல் தொடங்கிவிட்டது.

இயற்கையாகக் கிடைத்த காய் கனி கிழங்கு கீரை வகைகளைப் பச்சையாய்த் தின்ற மனிதன், அவற்றைத் தீயில் பக்குவப்படுத்தி உண்ணத் தொடங்கிய போதே அறிவியல் பிறந்து விட்டது.

இயற்கையாக உணவுப் பொருள்கள் கிடைக்காத நேரத்தில் கிடைக்காத இடத்தில், செயற்கையாக உணவுப் பொருள்களைப் பயிரிட்டு உண்டாக்கத் தொடங்கினானே அப்போதே அறிவியல் பிறந்துவிட்டது.

தோளிலும் தலையிலும் பொருள்களைச் சுமந்து சென்ற மனிதன், உருளைகளைக் கண்டுபிடித்து, இரண்டு உருளைகட்கு நடுவே உள்ள கட்டையில் பொருள்களை வைத்து இழுத்துச் செல்லத் தொடங்கினானே அப்போதே அறிவியல் பிறந்து விட்டது.

இவ்வாறு படிப்படியாக - அதாவது - முதல் வகுப்பிலிருந்து எம். ஏ. வகுப்புவரை படிப்படியாகப் படித்துச் செல்வதைச் போல், இன்றைய பெரிய அறிவியல் வளர்ந்துள்ளது.

இயற்கையில் மறைந்து கிடப்பவற்றை அறிந்து அவற்றை வெளிக்கொணர்ந்து பயன்படுத்திக் கொள்வது தான் அறிவியல். எம். ஏ. வரை படித்தது குறைவு. இன்னும் எவ்வளவோ படித்துத் தெரிந்து கொள்ள வேண்டியவை உள்ளன. இயற்கையில் பொதிந்து கிடப்பதை இதுவரையும் அறிந்துள்ள அறிவியல் குறைவு.