பக்கம்:வீடும் விளக்கும்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 127 துறவிகளின் பெருமையினையும், துறவறத்தின் சிறப் பினையும் பலவாறு பாராட்டிக் கூறியுள்ளாரே! மேலும் துறவறவியல் எனத் தனி இயல் ஒன்றும் வகுத்துள்ளாரல்லவா? ஆதலால் இல்லறத்தை விடத் துறவரத்தையே கொள்ளலாகாதா? என்று சிலர் வினவலாம், துறவறம் சிறப்புடையது என்பது உண்மைதான். பழந்தமிழ்த் துறவு: ஆயினும், பழந்தமிழர் கைக்கொண்டு வந்ததாக ஒர் துறவு நிலை பேசப்படுகின்றது. அஃதாவது:தொடக்கத்தில் குழந்தைகளுடன் வீட்டிலிருந்து இல்லறம் நடாத்தவேண்டும். நடாத்திச் சிற்றின்பம் முதலிய உலகப் பற்றுக்களை நுகர்ந்து வெறுத்து ஒதுக்கவேண்டும். பின்னர், குடும்பத் தலைவனும் தலைவியும் தம் வீட்டை விட்டு, ஊர்க்குப் புறம்பான தோர் இடத்தில் தங்கி துறவற நெறியில் ஈடுபட்டு உயிர்க்கு உறுதி தேடவேண்டும். இது ஒரு நல்ல முறையாகும். இதனை நம்பி யகப்பொருள் விளக்கம் என்னும் நூலுள் உள்ள “மக்களொடு மகிழ்ந்து மனையறங் காத்து மிக்க காமத்து வேட்கை தீர்ந்துழித் தலைவனும் தலைவியும் தம்பதி நீங்கித் தொலைவில் சுற்றமெபடு துறவறங் காப்ப' என்னும் நூற்பாவால் (சூத்திரம்) நன்கு தெளியலாம்.