பக்கம்:வீர காவியம்.pdf/39

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வீரகாவியம்

36


முகஞ்சுருங்கி ஒளியின்றிப் பார்வை தன்னில்
      முனைப்பின்றி யிருப்போனை வேந்தன் நோக்கி,
அகங்கனிந்து ‘விருந்தயர்ந்த வேளை தன்னில்
      அன்ப!நினை வருத்துகுறை நிகழ்ந்த தோ’என்
றிகலுடையான் றனைவினவ, ‘இல்லை யில்லை
      எள்ளளவு குறையொன்றும் நிகழ வில்லை,
புகலரிய நிறைகண்டேன்’ எனந கைத்துப்
      புகன்றாலும் அந்நகைப்பில் உயிரே யில்லை.52

உள்ளத்தைக் கவலைக்ககுத் தந்து விட்ட
      உண்மையினைக் கண்சொல்ல உணர்ந்த மன்னன்,
‘துள்ளிச்செல் வேகத்தில் இணையே யில்லாத்
      துணைப்பரியை இழந்ததுயர் கொல்லோ’என்று
மெள்ளத்தன் வாய்திறந்து மொழிய ‘ஆம்! ஆம்!
      மேவுமொரு பொருளிழந்த இழப்பே போல
உள்ளத்தில் ஓருணர்வு கவ்வி நின்றே
      உறுத்துவதால் இந்நிலையை உற்றேன்’என்றான்.53

‘நிமிர்தோளாய் என்னாட்டில் இழப்பே யில்லை;
      நின்துணையை நான்தருவேன் கவலை கொள்ளேல்!
தமராக நினைக்கொண்டேன்; நின்க லக்கம்
      தவிர்ப்பதுவே எனதுகடன்; புரவி தன்னை
எமர்தேடி ஈங்குய்ப்பர்’ என்றான் மன்னன்;
      ‘என்துணையை எனக்களித்துத் துயர்க ளைந்தால்
குமுறுமென துளமமைதி கொள்ளும்’ என்று
      கூர்வேலிற் கூர்மதியான் கூறிச் சென்றான்.54


இகல் - வலிமை, தமர் - உறவினர், எமர் - எம்மவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/39&oldid=911507" இலிருந்து மீள்விக்கப்பட்டது