பக்கம்:வீர காவியம்.pdf/40

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

37

காட்சிப் படலம்

இயல் 16

காதலெனும் கூர்வாளுக் கிலக்காய் நின்று
கண்துயிலா திரவெல்லாம் கிடந்தான் வேழன்.

பாடுபடும் உலகுக்கு மாலை சூட்டிப்
      பகலோன்றன் பணிமுடித்து மேலை வாயிற்
கூடுமுனம் இரவென்னும் அரசி வந்து,
      கோலநெடு வானரங்கில் நிலவு மங்கை
ஆடுநடங் கண்டிருந்தாள்; வீரன் றானும்
      ஆரணங்கின் மாலையணிந் திமைகள் ஒன்றாய்க்
கூடுவதை மறந்திருக்கத் தனிமை என்னும்
      கூர்வாளுக் கிலக்காகிக் கலங்கி நின்றான்.55

கலங்கியுளம் தடுமாறும் வீரன் றன்னைக்
      களங்கமுறும் வெண்மதியம் இரக்க மின்றி
இலங்கொளியால் வெப்புறுத்த, வெம்மை தாங்கா
      தேங்குமவன் தளர்பொழுதை உற்று நோக்கிப்
புலங்கிளறும் நலங்கெழுமும் தென்றற் காற்றுப்
      புகுந்துநனி மெய்வருடிப் புண்ப டுத்த,
வலங்கொண்ட திண்டோளான் வதங்கி யங்கு
      வழியின்றித் தவிக்கின்றான் அணையின் மீது.56



மாலைசூட்டி - மாலைப்பொழுதைச் சூட்டி, மாலை அணிந்து - மயக்கத்தைப்

பெற்று, வெப்பு - சூடு ,புலம்கிளறும் - புலன்களைக் கிளறிவிடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/40&oldid=911511" இலிருந்து மீள்விக்கப்பட்டது