பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/107

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சயந்தி நகரில் திருமணம்

105

“யானையை மீண்டும் பெறக் கானிற் சென்றபோது பகை மன்னனால் பற்றிக் கொள்ளப்பட்டாய்! இப்போது வெற்றியையும் அதன் சின்னமாக வாசவதத்தையையும் உடன்கொண்டு வந்திருக்கிறாய்! உனக்குப் புதல்வர் போன்ற உன் குடிகளை இனித் துன்பம் நீங்க ஆளவேண்டியது உன் கடமை!” என்று முதுமக்கள் வாழ்த்தினர். அரசன், குடிகள் என்ற உயர்வு தாழ்வு அன்பு வாழ்த்துக்கு ஏது? “திருமால் மார்பில் திருமகள்போல் எங்கள் மன்னன் நெஞ்சில் இடை விடாது உறையும் பேறு உனக்கு எய்துக! நீ வரக்காண யாங்கள் முற்பிறவியில் நல்வினை மிகுதியாகச் செய்திருந்தோம் போலும். பிரச்சோதனனுடைய மகள் மிகச் சிறந்த அழகியெனக் கேள்வியுற்றதுண்டு. அந்த அழகை நேரிலேயே கண்குளிரக் காணச் செய்த எம் அரசன் வாழ்க!” என்று தத்தையைப் பலர் வாழ்த்தினர். அந்த வாழ்த்தில் ‘அவள் தங்கள் நாட்டரசனுக்கு விரைவில் கோப்பெருந்தேவி என்ற மதிப்புக்குரியவள் ஆவாள்’ என்னும் பெருமையும் கலந்திருந்தது. வேறு சிலர், இவ்வளவு நற்செயல்களும் பிழை படாமல் நிகழ்வதற்கு இன்றியமையாதவனாய் இருந்தவன் யூகி என்பதைக் கேள்வியுற்று, அவனை வாயாற வாழ்த்தினர். “நன்றாக வந்த ஒரு பொருள், உலகில் ஒருவர்க்குத் தீதாய் முடிந்தாலும், வியப்பதற்கு இல்லை. தீதாய் வந்த ஒரு பொருள். நன்றாய் முடிந்து நலம் பயத்தலும், அத்தகையது தான். மாய யானையால் நம் மன்னனை வஞ்சகமாகச் சிறை செய்த பிரச்சோதனனுடைய தீமை, நம் மன்னனுக்கு நலமாய் முடிந்ததோடு அல்லாமல், அழகிற் சிறந்த நங்கை தத்தையையும் அளித்திருக்கிறது. மகளைக் கொடுப்போர் முதலில் தீது போற் காட்டிப் பின்பு செய்யும்நலம் இவ்வாறு குறிப்பாகவே இருக்குமோ?”

இப்படிப் பலப்பல எண்ணினர் சயந்தி நகரக் குடி மக்கள். இத்தகைய பல்வகையான ஆரவாரங்களுக்கும் இடையே, அமராபதியிற் புகும் இந்திரனைப்போலத் தத்தை முதலியோர் பின்தொடர உதயணன் அரண்மனையுள் புகுந்தான்.