பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/108

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

உதயணன் சயந்தி நகருக்கு வந்தபின் சில நாள்கள் அமைதியாகவும் இன்பமாகவும் கழிந்தன. உறவும் சுற்றமும் ஒன்று கூடிடக் கழிந்த அந்த நாள்கள், மறக்க முடியாதன. அந்நாள்களிடையே ஒருநாள் வாசவதத்தையின் திருமண நினைவை அம் மணத்தைச் செய்து கொள்வதற்கு உரியவனான உதயணனுக்கு நண்பர்கள் உண்டாக்கினர். அதன் பயனாக அரண்மனைக் கணியன் ஒரு மங்கல நாளை மணத்திற்கு ஏற்றதென்று வகுத்துக் கொடுத்தான். சோதிடநூற் பொருளும் தருக்க நூற்பொருளும் நன்குஅறிந்து தேர்ந்தவன் அந்தக் கணி. அரண்மனையில் அவனுக்குப் பலவகை மரியாதைகள் உண்டு. அவன் கூறிய நாளை நாடறிய எடுத்துரைக்குமாறு வள்ளுவர்கள் ஆணை பெற்றனர். வேற்று நாட்டு மன்னர்களுக்குத் தக்க தூதுவர்கள் மூலமாகத் திருமண ஒலைகள் அனுப்பப்பட்டன. முரசுக் கொட்டிலுள் தெய்வ வழி பாட்டுடனும் அருமையுடனும் பேணப்பெற்று வந்த பெரிய பெரிய முரசங்களைத் திருநாட் காலங்களிலும் படை நாட் காலங்களிலும் மணநாட் காலங்களிலும் யானை மேலேற்றி ஊரறிய ஒலிக்கச் செய்துகொண்டே செய்தி கூறுவது வள்ளுவர் வழக்கம். முரசை நீராட்டிச் சந்தனம் பூசி மாலையணிந்து யானை மேலேற்றிக்கொண்டு உதயணன் திருமண நாளை அறிவிப்பதற்கு வள்ளுவர் பல திசைகளிலும் சென்றனர்.

மன்னன் திருமணச் செய்தி கேட்ட குடிமக்கள் நகரைப் பலவகையாலும் அலங்கரிக்கத் தொடங்கினர். பொன்னிலும் முத்திலும் மணியிலும் பல்வகைத் தோரணங்கள் செய்து பெரு வீதிகள் தோறும் கட்டினர். வீடுகள், பெரு வாயில், வீதித் தொடக்கங்கள், முதலிய இடங்களிலெல்லாம் வாழை மரமும் பாக்கு மரமுமாகக் கட்டி அழகு செய்தனர். நகரிலுள்ள அறச் சாலைகள் எல்லாவற்றிலும் வந்தவர்களுக்கெல்லாம் உணவளிக்கும்படி ஏற்பாடு செய்தனர். இளநங்கையர்களும் ஏவல் மகளிரும் குங்குமம் முதலியவற்றைக் குழைத்து அழகிய வேறு பல வண்ணக் குழம்புகளையும்