பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/114

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி


சூழ்ச்சிமிக்க செயல்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த மாறுவேடத்தோடு கூடிய அவன் மனிதர்கள். உதயணன், பிரச்சோதனனாற் சிறைப்பட்டது கேட்டு, தான் இறந்ததாகப் பொய்யைப் பரப்பிவிட்டு உஞ்சைக்கு மாறு வேடத்தில் யூகி வந்தபோது அவனுடன் வந்தவர்கள்தாம் அத்தனை பேரும்.

உதயணன் பிடியில் ஏறித் தத்தையுடன் தப்பிச் செல்லுகிறவரை யூகிக்கு வெற்றிகரமான செயலாற்றல் ஏற்பட ஒவ்வொரு நொடியும் உதவி புரிந்த பெருமை அவர்களுக்கே உரியது ஆகும். அவர்களிற் பலர் அரண்மனையில் மாறுவேடத்தோடு பணிபுரிந்து அவ்வப்போது வேண்டிய செய்திகளை யூகிக்கு அனுப்பியவர். வேறு சிலர் வாணிகர்களாக வேடம் பூண்டு தக்க உதவிகளைச் செய்தவர். இன்னும் சிலர் முனிவர்போல அமைதியாக இருந்து சமயங்களில் வேண்டிய வேலைகளைச் செய்தவர் இறுதியில் உதயணன் புறப்பட்டுச் சென்றபோது அத்தனை பேரும் படை வீரராக மாறி, எதிர்த்தோரைப் போரில் வென்று உதயணனை நலமாகச் செல்லவிட்ட செயல் என்றும் மறக்க முடியாத நன்றிக்குரியது. அந்த நன்றியையும் ஊருக்குத் திரும்பிச் செல்லும் முறையையும் பற்றித்தான் யூகி அப்போது அவர்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தான். “நம்முடைய அரசன் சென்ற வழியிலேயே எல்லோரும் கூட்டமாகக்கூடிய நாடு செல்லுதல், பிறர் ஐயப்படுதற்கு ஏதுவாகும். நாட்டு வழியாகவோ, காட்டுவழியாகவோ, மலை வழியாகவோ பலப்பல மாறு வேடங்களில் தனித்தனியே பிரிந்து நாடு செல்லுங்கள். உஞ்சை நகரில் இது காறும் உலாவிய இன்னார் இன்னாரை இன்று காணோம். திடீரென்று அவர்கள் அத்தனை பேரும் மாயமாக எங்கே மறைந்தனர் என்ற ஐயப்பாடு இங்கே யாருக்கும் எழாதபடி சிறிது சிறிதாக உங்கள் செலவு அமையவேண்டும். இயல்பினாலும் குணத்தினாலும் உருவினாலும் வேறுபட்ட மனிதர்களைப் போன்ற நடிப்போடு நம் மன்னவன் உள்ள இடம் சென்று