பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/116

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி


வைசாலி நகரத்தில் இருந்த யூகி உஞ்சைக்குப் புறப்பட்ட போது, உதயணனுக்கு உதவி செய்யும் நோக்கத்துடன் வலியத் தானே வந்து யூகியுடன் சேர்ந்து கொண்டான், நன்றி மிக்க அந்தக் குயமகன். உஞ்சை நகரில் கோட்டைப் புறத்தில் ஒரு குயவனாகக் குடியேறிச் சிறு வீடு ஒன்றில் வாழ்ந்து வந்த அவன், அந்த வாழ்க்கை முழுவதையுமே உதயணன் நலத்திற்காகப் பயன்படுத்தியதை யூகி நன்கு அறிவான். நகரின் கோட்டைப் புறத்தில் அவன் இருந்ததால் யூகியின் சூழ்ச்சித் திறத்தில் உருவாகிய எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்ற எவ்வளவோ வசதியாக இருந்தது. முன்னொரு முறை இதே குயவன் வீட்டில்தான் உதயணனை நகருக்கனுப்பியபின் சாங்கியத்தாயை யூகி சந்தித்துப் பேசினான். நகரின் உள்ளே இருந்து செய்திகளை அறிந்து யூகிக்குத் தெரிவிக்கவும், யூகி கூறிய செய்திகளை நகருக்கு உள்ளே தக்கவருக்குச் சொல்லி அனுப்பவும் அவன் செய்த உதவி அளக்க முடியாதது.

யூகிக்கு அவ்வப்போது மந்திராலோசனைக் கூடமாகவும் பயன்பட்டிருக்கிறது அவன் மனை. அத்தகைய குயவனுடைய வீட்டிற்குத்தான் தவப் பள்ளியிலிருந்து யூகி வந்து சேர்ந்தான் இப்போது. அங்கே அவன் எதிர்பார்த்தது போலவே சாங்கியத் தாய் அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள். அவளை வரவேற்று முகமன் கூறியபின் யூகி நிகழ்ந்தவற்றை அவளுக்கு விரிவாகச் சொன்னான். அவளும் நகர் திரும்ப விரும்புவதாகக் கூறினாள். பசியையும் வெம்மையையும் போக்கும் மருந்துக் கலப்புடன் கூடிய ஒரு வகை அவற் பொதியையும் நீருண்பதற்கு நீர்க்கரகத்தையும் ஏற்பாடு செய்து கொள்ளுமாறு அதற்குரிய விவரங்களை யூகி அவளுக்குக் கூறினான். சாங்கியத் தாய் அவற்றைக் கவனமாகக் கேட்டுக் கொண்டாள். தாங்கள் புறப்பட வேண்டிய நாளையும் அதற்கான ஏற்பாடுகளையும்கூட யூகி விவரித்தான். சாதகனும் சாங்கியத் தாயும் யூகியின் மதிநுட்பத்தை வியந்தவாறே கேட்டனர். யூகி, சாங்கியத் தாய், சாதகன் மூவருமே உதயணன்பால் நன்றி மிக்கவர்தாம். ஆனால்,