பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/120

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

அவன்மேல் முகத்திலும் உடலிலுமாகத் தெளித்து, அவன் மயக்கத்தைத் தெளியச் செய்தான். மூர்ச்சை தெளிந்த யூகி, உதயணன் நலமே என்பதை முன்பே சுருக்கமாகக் கேள்விப் பட்டிருந்தும், தான் அவ்வாறு மூர்ச்சித்ததற்காக நாணுபவன் போலச் சற்றே தலைகுனிந்தான். பின்னர் மேலே நிகழ்ந்தவற்றை இடவகன் கூறத் தொடங்கவே அதைக் கேட்கலானான். உருமண்ணுவாவின் பொறுப்பிலிருந்த தன் ஆளுகைக்குட்பட்ட சயந்தி நகரை அடைந்த உதயணன், தத்தையைத் திருமணம் செய்து கொண்டதையும் பிறவற்றையும் இடவகன் இறுதியாகக் கூறியபோது, யூகி மனமகிழ்ச்சி எய்தினான். ஆனால் அதையடுத்து இடவகன் சொன்ன செய்தி அவனைக் கலக்கத்தில் ஆழ்த்தியது.

“தனக்குரிய கோசாம்பி நாட்டை ஆருணி அரசன் ஆள்வதையும் உதயணன் அறியான். அரசாட்சிப் பொறுப்பையும் மேற்கொள்ளவில்லை. கோசாம்பியிலிருந்து ஒடி ஒளிந்து வாழ்கின்ற தம் தம்பியர் துயரையும் நினைத்துப் பார்க்கின்றானில்லை. உதயணன் எப்போதும் தத்தையோடு தன் நேரம் முழுமையையுமே செலவிடுகிறான். இன்னும் சில நாள் இப்படியே கழிந்தால், உதயணனுடைய திறமை, ஒழுக்கம், பெருமிதம் முதலிய யாவும் குன்றி வீரவுணர்ச்சியற்ற வெற்றுச் சிற்றின்ப மனிதனாகி விடுவான் அவன். ‘நம்முடைய தலைவன் என்ற உயர்நிலையில் அவன் இருக்கும் போது அவனை நாம் எப்படித் திருத்தி வழிக்குக் கொண்டு வர முடியும்’ என்ற இந்த நினைவுடனேயே, ‘மேலே என்ன செய்வது?’ என்பது அறியாமல் நான், உருமண்ணுவா, வயந்தகன் யாவருமே ஒன்றும் புரியாமல் இருக்கிறோம்” என்று இடவகன் கூறிமுடித்தான். யூகி உடனே அவனுக்கு மறுமொழி கூறாமல், ஓர் ஆளை வரவழைத்துப் புட்பக நகர எல்லையில் தான் விட்டுவந்த சாங்கியத் தாயின் அடையாளங்களைச் சொல்லி, அங்கிருந்து சயந்திநகர் போகும் வழியிலே அவள் எங்கே அகப்பட்டாலும் தேடித் தன்னிடம் கொணருமாறு கூறி அனுப்பினான். அவனை அனுப்பிவிட்டு