பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/124

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

“ஆமாம்! யூகியும் உங்களோடு உஞ்சையிலிருந்து திரும்பி வந்திருக்க வேண்டுமே? எங்கே அவன்? நலமாகத்தானே இருக்கிறான்?” இந்தக் கேள்வி சாங்கியத்தாயால் விடை கூற முடியாதது அல்ல. ஆனால், இதற்கு அவள் கூறவேண்டிய விடை இன்னும் சில திட்டங்கள் முடிந்தபின் சொல்லக் கூடியதாக இருந்தது. என்ன விடை சொல்லவேண்டும்? என்பதைத்தான் யூகி முன்பே அவளிடம் கூறியிருந்தானே? அதை இவ்வளவு விரைவாக வெளிப்படுத்த நேருமென்று அவள் எதிர்பார்க்கவில்லை. ஒரு கணம் என்ன கூறுவது என்ற திகைப்பும் சிந்தனையும் அவளுக்கு ஏற்பட்டன. உடனடியாக உதயணனுக்கு அவள் விடை கூறவில்லை. சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தபின் யூகியைப் பற்றிய வேறு சில செய்திகளை விவரித்துக்கொண்டே பொழுதைக் கழித்தாள். ‘யூகி தன்னுடன் வந்தானா? அவன் நலமா? இல்லையா?’ என்ற விவரங்கள் எதுவுமே இல்லாமல் சென்றது அவள் பேச்சு. “விரைவிற் சென்று நம் அரசனை அடையுங்கள்” என்று எனக்கும் ஏனையோர்க்கும் கூறிவிட்டுத் தான் பின்னால் வந்து சேர்வதாக யூகி கூறினான் எனச் சாங்கியத் தாய் இறுதியாகச் சொல்லி முடித்தாள். அதைக் கூறியதும் யூகி கூறிய பொய்ச் செய்தியைப் பின்பு கூறலாமென்ற கருத்துடன் வாசவதத்தையைப் பார்க்க அவனிடம் விடைகொண்டு எழுந்தாள்.

தளர்நடைப் பருவம் முதல், உஞ்சை நகரில் உதயணனோடு பிடியேறி வந்தது முடியத் தத்தை தன் நெஞ்சைத் திறந்து பேசுவதற்கு ஏற்ற ஒரே ஒருத்தியான செவிலித்தாயாக இருந்தவள் சாங்கியத் தாய்தான். அவளைக் கண்டவுடன் அப்படியே தன் மெல்லிய இடைவளைய இறுகத் தழுவிக் கொண்டாள் வாசவதத்தை. திடீரெனச் சந்தித்த சந்திப்பின் இன்ப மிகுதியால் இருவருக்குமே கண்ணில் நீரும் துளித்தது. உஞ்சை நகரிலிருந்து வாசவதத்தை வந்தபிறகு அரண்மனையில் தந்தை தாய் முதலியோர் அடைந்த நிலையை அவள் கேட்கவே, சாங்கியத் தாய் அவற்றைக் கூறினாள். அப்போது