பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/125

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சோகமும் அசோகமும்

123

தான் தாய் தந்தையரையும் ஏனைச் சுற்றத்தினரையும் எண்ணிப் புலம்பினாள் வாசவதத்தை. அவளைத் தேற்றி ஆறுதல் கூறிய சாங்கியத் தாய், “திருமணமான மங்கல மகளிர், இவ்வாறு பெற்றோரை எண்ணி வருந்துதல் கூடாது” என்று அவளுக்குக்கூறி அரண்மனைப் பூங்காவிலிருக்கும் மிக உயர்ந்த செய்குன்று ஒன்றிற்கு அவளை அழைத்துச் சென்றாள். அந்தச் செய்குன்றிலிருந்து உஞ்சை நகரத்தைத் திசை சுட்டிக் காட்டித் தத்தையினுடைய மனக் கலக்கம் தீருமாறு மேலும் பல தேற்றுரைகளைக் கூறினாள் சாங்கியத் தாய். தத்தை மனந்தேறியபின் உருமண்ணுவா, வயந்தகன், எல்லோரும் யூகியோடு கூடிச் செய்திருக்கும் திட்டங்களை அவள் துணுக்குறாதபடி மெல்லக் கூறினாள். எல்லாவற்றையும் கேட்டு முதலில் திகைத்த வாசவதத்தை, இறுதியில் உதயணன் நலங்கருதி யூகியின் திட்டப்படி நடக்க ஒப்புக் கொண்டாள். உறுதிப் பொருளை விளக்கும் நன்னெறி நூல்களை முயன்று கற்று வருந்தித் தவம் செய்வோன் பின்னர் நற்பயன் பெறுவதுபோல, யூகியின் திட்டத்தால் வருத்தமடைவதற்குரிய பல நிலைகள் நேரிடுமாயினும் பின்னால் நலமே விளையும் என்று தத்தை மனந்தெளிந்தாள். அந்தத் திட்டப்படி தானும் ஒத்துழைப்பதாக ஒப்புக் கொண்டாள் அவள்.

தத்தையின் இசைவு பெற்ற சாங்கியத் தாய் அவளை மீண்டும் விரைவில் சந்திப்பதாகக்கூறி விடைபெற்றுக் கொண்டு யூகி தன்னிடம் குறிப்பிட்டிருந்தபடி அவன் ஒளிந்து வாழும் மறைவிடத்துக்குச் சென்றாள். உதயணனைக் கண்டதையும் அவன் கேட்ட கேள்வியையும் வாசவதத்தை தங்கள் திட்டத்திற்கு இசைந்ததையும் யூகியிடம் சாங்கியத் தாய் விளக்கமாகக் கூறினாள். அவற்றைக் கேட்ட யூகி, தான் இறந்துவிட்டதாக எழுப்பிய செய்தியைக் குறிப்பாகச் சாங்கியத் தாய் மூலம் உதயணனுக்கு அனுப்பத் தீர்மானித்தான். சித்திரம் வரைவதற்கு ஏற்ற பலகை ஒன்றில் உதயணனுடைய உருவத்தை வரைந்து, அந்த ஒவியத்தை