பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/128

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

மென்று கருதித் தோழர்களோடு கலந்து சிந்தித்துப் பின்வரும் முடிவுக்கு வந்தான். உதயணனையும் ஏனையோரையும் இலாவான மலைச்சாரலில் உண்டாட்டு விழாவிற்காக அழைத்துச் சென்று, அங்குள்ள முக்கால நிகழ்ச்சிகளையும் அறிந்து சொல்லவல்ல முனிவரொருவர் மூலம் அவனுடைய வாழ்வில் இதுவரை நடந்தவற்றையும் இனி நடக்கப் போவனவற்றையும் அவனுக்குக் கூறச் செய்து, இடையே யூகி எப்படியும் உயிர்பெற்று வருவான் என்பதைப் போன்ற ஒருவகை நம்பிக்கையையும் அம் முனிவர் வாயிலாகவே அவனுக்கு ஏற்படுத்திவிட வேண்டும் என்பதுதான் உருமண்ணுவாவின் அந்த முடிவு. அதற்கு மற்றவர்களும் இசைவு தெரிவித்தனர். தோழர்கள் சம்மதம் பெற்ற உருமண்ணுவா, உதயணனை அணுகி இதனை உரைத்தான். உதயணன் முதலில் “அப்படி முக்காலமும் அறிந்து கூறும் முனிவர்களும் இருக்கிறார்களா?” என்று சந்தேகப்பட்டு வினாவினான். அவனுக்கு நம்பிக்கை ஏற்படும்படியாக அந்த வினாவுக்கு விடை கூறவேண்டும்’ என்று நினைத்த உருமண்ணுவா, “நீயும் உன் தாயும் விபுலமலைச் சாரலில் சேடக முனிவரிடம் வாழ்ந்து வந்ததையும் பின் உன் மாமனுக்குரிய ஆயர்குலத்து ஆட்சி பெற்று இருந்ததையும் முதலில் அறிய முடியாதபடி உன் தந்தை சதானிகன் துன்புற்றார். கோசாம்பியிலிருந்து சதானிக மன்னர் இப்படி ஒரு முனிவனை அடைந்து, வனத்தில் அவனிடம் கேட்டுத்தான் முக்கால நிகழ்ச்சிகளையும் அறிந்து கொண்டார். அதுவும் அல்லாமல், யூகி இறந்ததாக எழுந்த செய்தி ஒருவேளை பொய்யாகவும் இருக்கலாம். அதனால் எதற்கும் இலாவான மலைச்சாரலில் உண்டாட்டு விழாவிற்காகத் தங்கி அப்படியே அந்த முனிவரையும் பார்த்து வரலாம்” என்று கூறினான். உருமண்ணுவா தக்க முறையில் கூறிய இந்த விடை உதயணனை உண்டாட்டு விழாவிற்கு உடன்படச் செய்தது.

இலாவான மலைச்சாரலில் உண்டாட்டுவிழா நடைபெறப் போவதை நகரமெங்கும் அறிவிக்கச் செய்தனர்.