பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/130

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

பார்த்தனர் வேறு சில மகளிர். பொன்போன்ற நிறத்துடன் பூத்துக் குலுங்கும் வேங்கை மலர்களைப் பறித்துத் தம் காதல் மகளிர்க்கு விரும்பி அளித்தனர் சில ஆடவர். பின்பு ஆடவரும் மகளிருமாகப் பல்வகை விளையாட்டுக்களை ஆடினர். ஊசலாடுவோரும் பூக்களிற் செய்த பந்தை அடித்து விளையாடுவோருமாகப் பலர் பல விளையாடல்களை மேற்கொண்டனர். மயிலும் கிளியும் குயிலும் பயிலும் சோலைகளில் தழை கொடிகளால் கயிறிட்டு ஊஞ்சலாடிய காட்சி எழில் மிகுந்து விளங்கியது. வளம் பொருந்திய மலையில் வாழும் வளம் பொருந்திய மக்கள் இன்னும் எண்ணற்ற இன்பங்களை நுகர்ந்தனர். வேனிற் காலத்தில் பொழில்களில் வாழும் வாழ்க்கையின் அருமையைப் பொழில்வதி வேனில் பேரெழில் வாழ்க்கை என்று புகழ்ந்து கூறியுள்ளனர். அத்தகைய பேரெழில் வாழ்க்கையாகத்தான் இவர்களுடைய வாழ்வு அமைந்தது.

மக்கள் மலைச் சாரலில் இவ்வாறிருக்க உதயணன் அவன் நண்பர், வாசவதத்தை முதலியோர் பரிவாரங்கள் புடைசூழ மிக்க ஆரவாரத்துடன் மலைச் சாரலிலுள்ள ஒரு பெரிய வனத்தில் வந்து தங்கினர். அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு எதிரே ஒரு தவப்பள்ளி இருந்தது. அதில் பேராற்றல் மிக்க சிறந்த முனிவரொருவர் வாழ்ந்து வந்தார். உதயணன் அந்த முனிவரைக் கண்டு தான் குறிகேட்க விரும்புவதாகத் தக்கவர்கள் மூலம் அவருக்குக் கூறி அனுப்பினான். முனிவர் மகிழ்ந்து குறிகூற உடன்பட்டவுடன் உதயணன் அங்கே சென்றான். அந்த முனிவரின் தவப் பள்ளிக்குச் செல்லும் வாயிலில் மணல் முற்றத்தின்மேல் அழகாகத் தழைத்து வளர்ந்திருந்த அசோக மரம் ஒன்று விளங்கியது. அந்த அசோக மரத்தின் நிழலில் அவனை எதிர் கொண்டு இருக்கச் செய்தார் முனிவர். சோகம் நிறைந்த உதயணன் அசோக மரத்தின் கீழே அமர்ந்திருந்தான்.

அப்போது உதயணன் கையில் வைத்துக் கொண்டிருந்த வெள்ளிய இதழ்களையுடைய நறுமண மலர் ஒன்று கையி