பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/140

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

என நினைத்தான். வாசவதத்தையும் ஒத்துழைப்பதாக ஒப்புக் கொண்டது யூகிக்கு மேலும் நம்பிக்கை அளிப்பதாயிருந்தது.

காடு சென்றிருந்த உதயணன் இலாவாண மலைச் சாரலிலுள்ள வளம்மிகுந்த பூங்காக்களில் தத்தைக்கு வேண்டிய நறுமண மலர்களையும் தழைகளையும் சேகரித்துக்கொண்டு அதை அவளுக்கு அளிக்கும் ஆவலோடு திரும்பி, விரைவாக நகருக்குப் புறப்பட்டான். தத்தையின் சிறு பிரிவைக்கூட அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தன்னுடைய ஒரே கன்றை நினைத்து மேய்தல் வெளியிலிருந்து ஆர்வத்தோடு திரும்பும் தாய்ப் பசுவின் மனநிலையை ஒத்திருந்தான் அப்போது அவன். உதயணனோடு காட்டுக்கு உடன் வந்திருந்த குதிரைப் பாகன், மரத்தடியில் கட்டப் பெற்றிருந்த இரண்டு குதிரைகளில் அரசனுக்குரிய உயர்ந்த சாதிக் குதிரையைச் சேணம் பூட்டிக் கொண்டுவந்து நிறுத்தினான். பாகன் கையிலிருந்து கடி வாளத்தை வாங்கிக்கொண்டு தாவி ஏறினான் உதயணன். பாகன் கை கூப்பியவாறே அரசனை வணங்கி விலகிநின்று கொண்டான். குதிரை முன் கால்களைக் கொண்டு தாவிப் பாய்ந்து, காற்றிலும் கடுகிச் சென்ற குதிரையின் குளம் பொலி மலைச் சிகரங்களில் பயங்கரமாக எதிரொலித்த வண்ணம் இருந்தது. பாகனுடைய குதிரையும் உதயணனைப் பின் தொடர்ந்தது. குதிரை மலை நடுவிலுள்ள வழியைக் கடந்து நகரை அணுகியபோது உதயணனுக்குச் சில தீய நிமித்தங்கள் ஏற்பட்டன. இடது புறத்துக் கண்ணும் தோளும் துடித்தன. சில பறவைகளின் குரல்கள் தீமைக்கு அறிகுறியாக ஒலித்தன. இத்தகைய தீக் குறிகளால் மனங் கலங்கியவாறே குதிரை மேல் வந்து கொண்டிருந்த அவன், தொலைவில் நகரினுள்ளே அரண்மனைப் பக்கமாகத் தெரியும் புகைப் படலங்களைக் கண்டான். இந்தக் காட்சி அவன் கலக்கத்தை மேலும் அதிகப்படுத்தியது.

வழியில் ஏற்பட்ட துர்நிமித்தங்களும் புகைக் காட்சியுமாகச் சேர்ந்து ‘ஆருயிர்க் காதலி வாசவதத்தைக்கு ஏதேனும்