பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/141

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நலம் நாடிய சூழ்ச்சிகள்

139

துன்பம் நேர்ந்திருக்குமோ? அவள் நம்மைப் பிரிந்தனளோ’ என்ற அச்சத்தையும் துயரத்தையும் அவனுக்கு ஏற்படுத்தின. இதற்குள் குதிரை நகரின் தலைக்கோட்டை வாயிலை அடைந்துவிட்டது. அவன் மனத்தில் அடக்க முடியாத பரபரப்பு வளர்ந்தது. அருகில் நெருங்கியதும் அரண்மனை தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததைக் கண்டான் உதயணன். ‘காட்டு வேடர்தாம் அரண்மனைக்குத் தீக்கொளுத்தினர்’ என்று ஒரு பொய்யை மெய்போலச் செய்வதற்காகச் சில காட்டு வேடர்களை அடித்துத் துரத்துவதுபோலத் துரத்திக் கொண்டே வயந்தகனும் உருமண்ணுவாவும் அங்கே வந்தனர். எதிர்ப்புறமிருந்து குதிரைமீது வரும் உதயணன் நகரிற் புகைகண்டு துயரத்தால் மயங்கிவிடாமல் அவனை ஆற்றக் கருதிய அவர்கள், தலைக்கோட்டை வாசலிலேயே அவனை எதிர் கொண்டு நின்றனர். உதயணன் தான் கொண்டு வந்த மலர்களையும் அரும்புகளையும் சிதறிவிட்டுத் துயரத்தினால் தாக்குண்டு தோன்றினான். அவர்களுக்கு அப்பால் சற்றுத் தொலைவில் வாசவதத்தையின் தோழியாகிய காஞ்சன மாலை அழுது புலம்பி அரற்றிக் கொண்டிருந்தாள். தீ நாக்குகள் போன்ற பேரிதழ்களோடு வடியசெந்தாமரை மலர்கள் செறிந்து பூத்திருக்கும் ஒரு பொய்கையில், அன்னமொன்று தன் சேவலைத் தேடி அலமரல் போல இருந்தது காஞ்சனையின் அப்போதைய நிலை. புன்சொற் கேட்ட பெரியோர் போலக் கருகி வாடியிருந்தது அவள் பொன் மேனி. தன் தலைவியான வாசவதத்தையைப் பற்றிக்கூறி அரற்றியவாறே, அவள் அவலமே உருவாய் நின்று அங்கே அழுது கொண்டிருந்தனள்.

இவ்வாறு வாசவதத்தையை முன்னிலைப் படுத்தி அரற்றிக் கொண்டிருந்த காஞ்சனையின் மொழிகள் அப்போது தான் குதிரையில் வந்து அங்கே நின்ற உதயணன், செவியில் பட்டன. ஏற்கெனவே கலக்கமும் பயங்கரமான சந்தேகமும் கொண்டு வந்திருக்கும் உதயணன், காஞ்சனையின் இந்த அரற்றலையும் வயந்தகனும் உருமண்ணுவாவும் கையைப்