பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/146

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

உதயணன் பிணத்தைப் பார்வையிட வேண்டிய இடத்திற்கு அருகில்தான் தத்தையும் சாங்கியத் தாயும், யூகி இருக்குமிடத்திற்குத் தப்பிச் சென்ற சுரங்க வழி திறந்து கிடந்தது. உருமண்ணுவா முன்னேற்பாட்டுடன் தந்திரமாக ஒர் ஏவலன் மூலம் அந்தக் கதவை அடைத்து எரிந்துபோன நீற்றையும் கட்டைகளையும் கொண்டு மூடிச் சுரங்க வழியை மறைத்து விடுமாறு சொல்லி அனுப்பியிருந்தான். போன ஏவலனிடமிருந்து காரியம் முடிந்ததாகத் தகுந்த குறிப்புக் கிடைத்த பின்னே உதயணனை அழைத்துக்கொண்டு எரிந்து போன பள்ளியறைக்குள் நுழைந்தான் உருமண்ணுவா. சற்று விலகியிருந்தபடியே தத்தை, சாங்கியத் தாய் இவர்களின் எல்லா அணிகளும் பூட்டப்பெற்று உருத்தெரியாமற் கரிந்து போயிருந்த போலிப் பிணங்களை உதயணனுக்குக் காட்டி, இருவரும் இறந்தது பொய்யில்லை என்பதை அவன் நம்பும்படி செய்தான். உதயணனும் அதை அப்படியே நம்புவதற்குச் சந்தர்ப்பம் துணை செய்தது.

பிணத்தின்மேலும் வேறு சில இடங்களிலும் சிதறிக் கிடந்த தத்தையின் அணிகலன்கள் ஏவலரால் ஓரிடத்தில் கொண்டு வந்து குவிக்கப் பெற்றன. அவை பெரும்பாலும் சிதைந்து போயிருந்தன. அந்த நகைகளுக்கு முன் அமர்ந்து உதயணன் கண்ணிர் விட்டுக் கதறிய காட்சி உண்மை தெரிந்த உருமண்ணுவா முதலியோரைக்கூட மனம் உருக்கி வருத்தத்தில் ஆழ்த்தியது. ஒவ்வொரு பொன்னகையும் தத்தையின் செவ்விதழ்களுக்கு நடுவே தோன்றிய புன்னகையை உதயணனுக்கு நினைவூட்டின. முத்து வடமும், சித்திர உத்தியும், நித்திலத் தாமமும், நெற்றிச் சுட்டியும், கழுத்தணி கண்டிகையும் என்று சொல்லில் அடங்காத பல அணிகலன்களில் அவள் செளந்தரியப் புன்முறுவல் நிச்சயம் அவனுக்குத் தெரிந்து தான் இருக்கவேண்டும். ஒவ்வோரணி கலனும் தத்தையின் உடலில் அழிந்துபோன ஒவ்வோர் அங்க வனப்பையும் அவனுக்குச் சொல்லிக் கொண்டிருந்தது; நினைவூட்டிக் கொண்டிருந்தது. அவன் கண் கலங்கினான்.