பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/149

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

துன்பத்தில் விளைந்த துணிவு

147

மூவரும் நிறம் மாறிய வேற்றுருவத்தோடு சுரங்க வழியாக அங்கிருந்து புறப்பட்டனர். அவர்கள் தாங்கள் அடைந்த வேற்றுருவத்தை, அந்தணர்களுக்கு உரிய கோலங்களோடு மேலும் புனைந்து மாற்றிக் கொண்டனர். சுரங்கம் அடர்ந்து வளர்ந்திருந்த சந்தனமரக் கூட்டங்கள் செறிந்த ஒர் மலைச் சாரலில் அவர்களைக் கொணர்ந்துவிட்டது. ஆருயிர்க் காதலனுடைய மனநிலையைச் சீர்திருத்துவது ஒன்றே குறிக் கோளாகக்கொண்ட வாசவதத்தை, அதற்காக எவ்விதமான இன்னல்களையும் ஏற்றுப் பொறுத்துக்கொண்டு யூகியைப் பின்பற்றினாள். அவளுடன் துணையாகச் சாங்கியத் தாயும் இருந்தாள். நடந்துசென்று விரைவில் வழிமேல் சினாலயத்தோடு கூடிய பெரியமலை ஒன்றை அடைந்த அவர்கள் அங்கே ஒரு தவப் பள்ளியையும் கண்டு மகிழ்ந்தனர். பூத்த குவளை மலர்களோடு கூடிய புதுநீர்ப் பொய்கைகளும், எரி மலர்ந்தாற் போன்ற பூக்கள் விரிந்த வேங்கை மரங்களுமாக அழகிய சூழ்நிலையோடு அமைந்திருந்தது அந்தத் தவப் பள்ளி. ஆசிரமத்தின் முன்புறத்தில் மா, பலா, வாழை, நாவல், மாதுளை முதலிய மரங்கள் செழித்து வளர்ந்து பசுமை நல்கின. மணல் முற்றத்தில் முனிவர்களும் தயாத மகளிர்களுமாகத் தோற்றமளித்த அந்தத் தவப் பள்ளியை நாடிச் சென்றனர் அவர்கள்.

அங்கே தவம் செய்து கொண்டிருக்கும் முனிவர்களில் ஒருவர் உருமண்ணுவாவின் தந்தை என்பது யூகிக்குத் தெரியும். ஆயினும் மூவரும் முனிவரிடம் தாம் யாரென்பதை விவரிக்காமல் சில நாள் அங்கே தங்கியிருக்க வேண்டிய காரியத்தை மட்டுமே கூறினர். முனிவர் மறுக்காமல் ஒப்புக் கொண்டு இடமளித்தார். யூகி, தத்தை, சாங்கியத் தாய் ஆகியவர்கள் மாய மருந்தினால் பெற்ற மாற்றுருவோடு அங்கே மறைவாக வாழ்ந்து வந்தனர். அகலாமலும் அணுகாமலும் ஒட்டியும் ஒட்டாமலும் தவப் பள்ளியில் அவர்கள் பழகி வந்தனர். எப்போதாவது தங்களைப் பற்றித் துருவித் துருவித் தெரிந்து கொண்டுவிட வேண்டும் என்ற ஆவலோடு கேட்டவர்களுக்குச் சாங்கியத் தாய் ஒரு சிறிய பொய்க்