பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/151

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



துன்பத்தில் விளைந்த துணிவு

149

உருமண்ணுவாவை யூகி அனுப்பிவிட்டு, அங்கிருந்து தாங்களும் சில நாள்களில் புதிதாக வேறோர் இடம் செல்ல வேண்டும் என்று தீர்மானித்தான். அங்கிருந்து மிக அண்மையில், உருமண்ணுவாவின் தந்தைக்கு நெருங்கிய தோழனாகிய உக்கிர குலவேந்தன் விசயவரனால் ஆளப்படும் சண்பை என்னும் வளம்மிக்க நகரம் இருப்பது அப்போது அவன் நினைவிற்கு வந்தது. கங்கை நதி பாயும் சண்பை நகரம் எங்குமே தனக்கு நிகரில்லாதது. அந் நகரத்து மதில் போல அமைப்பும் தலையழகும் பொருந்திய அகழியோடு கூடிய மதிலரண் பிற இடங்களில் எங்குமே காண்பது அரிது. மதில் வாயில்களைத் தோற்றுவாயாகக் கொண்ட அந் நகர வீதிகள் வனப்பு மிக்கன. அந்நகரில் யூகிக்கு நெருங்கிய நண்பனாகிய மித்திரகாமன் என்னும் வணிகன் இருந்தான். அந்த நகரில் எவருக்கும் தத்தையையும் சாங்கியத் தாயையும் தெரிந்திருக்கக் காரணமில்லை. அநேகமாக மித்திரகாமனைத் தவிர ஏனையோருக்கு யூகியைக்கூடத் தெரிந்திருக்காது எனவே அங்கே சென்று, மறைந்து மறைந்து ஒடுங்கும் இடரின்றிச் சுய உருவிலேயே சிறிது காலம் வசிக்கலாம் என்ற முடிவிற்கு வந்தான் யூகி. மித்திரகாமனோ மிகப் பெரிய செல்வன். முட்டில்லாத வளமான வாழ்க்கை அவனுடைய வாழ்க்கை.

சண்பையின் புறநகரில் அவன் வீடு மிகப்பெரியது. பார்க்க எடுப்பும் கவினும் நிறைந்த தோற்றமுடையது. தத்தை, சாங்கியத் தாய் இவர்களோடு சண்பை நகர் சென்றான் யூகி. மித்திரகாமன் அவர்களைப் போற்றி வரவேற்றான். அவன் மனையை அடைந்து அங்கே நலமாகத் தங்கியிருந்தனர் யூகி முதலியவர்கள். எனினும், உதயணனைப் பிரிந்திருப்பது தத்தைக்குத் துயரளித்தது. காஞ்சனையும் சாங்கியத்தாயும் தத்தையின் சோர்வு நீக்கி நல்ல மொழிகளை ஆறுதலாகக் கூறிக்கொண்டிருந்தனர். யூகி அமைதியாக மேலே வகுக்க வேண்டிய திட்டங்களை வகுத்துக் கொண்டிருந்தான். சாங்கியத் தாய் புதுப் பொய்க் கதைகளைக்