பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/155

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகத யாத்திரை

153

அந்தப் பழங்கதையினாலாவது உதயணன், மனம் ஆறாதா என்பதே அவர்கள் ஆசை! உதயணன் மனத்தில் பற்றியிருந்த விரக்தியின் பிடிப்பு இதனால் சற்றே தளர்ந்து வாழ்க்கையில் ஆசைதோன்றும் என்பது அவர்கள் நம்பிக்கை ஆகும். எந்த ஆசையை அவனிடமிருந்து அழித்தால் வீரம் பிறக்கும் என்று கருதினார்களோ, அதே ஆசையோடு வீரமும் பணிந்து போனதைப் பார்த்தபோது அவர்களுக்கு வருத்தமாக இருந்தது. நம்பிக்கையை மேலும் துண்டுவதற்காக உதயணனின் பார்ப்பனத் தோழனாகிய இசைச்சன் அவனுக்குச் சில உறுதி மொழிகளைக் கூறலானான்.

“மந்திர வித்தைகளால் முடியாத விழுமிய செயல்கள் என எவையுமே இல்லை. சாதாரண மக்கள் இதனை நம்புவதில்லை. என்றாலும் காரியத்தை முடிக்குந் திறன் இவைகளுக்கு உண்டு. நாமும் இந்த வழிகளில் முயன்று வெற்றி எய்தலாம். சாதனைக்குரிய முயற்சியில் ஈடுபட்டு, பின் அது நிறைவேறாது என்ற நிலை வந்தாலும் அதனைச் சால்புடையோர் பழிக்கமாட்டார்கள். வாசவதத்தை இறந்து போனாள். ஆனால் அவள் எப்படியும் வேறொர் உருவில் பிறந்துதான் இருக்க வேண்டும். அந்த உருவத்திலிருந்து மாற்றி வாசவதத்தை உருவிலேயே அவளைத் தோன்றச் செய்யும் ஆற்றல் படைத்த வித்தை ஒன்று உண்டு. அதில் கற்றுத் தேர்ந்த அந்தண முனிவர் ஒருவர் மகத நாட்டின் தலைநகராகிய இராசகிரிய நகரத்தில் வாழ்ந்து வருகிறார். அங்கே நாம் சென்று அந்த முனிவரைச் சந்தித்து அவரை வழிபாடு செய்த பின் விச்சையினால் யூகியையும் தத்தையையும் அவர்களுடைய பழைய தோற்றத்துடனேயே அடையலாம். அதனுடன் அவ்வரிய மந்திர வித்தையையும் கற்றுக்கொண்டு விடலாம்” என்று இசைச்சன் கூறிய மொழிகளை உதயணன் முற்றிலும் விருப்பத்தோடு கேட்டான். கேட்டு முடிந்தவுடன், “அத்தகைய வித்தையும் உலகில் உண்டோ? மெய்யாகவா?” என்று வியப்புத்தாங்காமல் இசைச்சனை நோக்கிக் கேட்டான் உதயணன். உடனே இசைச்சன் அவ்வித்தைக்குரிய முதனூலில் இருந்து இரண்டோர் செய்திகளை உதயணனுக்குக்