பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/159

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இராசகிரிய நகரம்

157

காவல்முறை வழக்கப்படி ஒரு நாட்டின் தலைநகருக்குத் தேவையான எல்லா இலட்சணங்களும் அதற்கு இருந்தன. தெருக்கள், வீதிகள் ஆகியவற்றின் அமைப்பு, பல பேரிதழ்களையும் சிற்றிதழ்களையும் கொண்ட ஒரு மலர்போலக் காட்சி அளித்தது. கோட்டை மதில், படைச்சேரி, கணிகையர் தெரு, வேளாளர் தெரு, வாணிகர் தெரு, அந்தணர் தெரு, அமைச்சர் தெரு என இவை முறையே வட்ட வட்டமாகச் சுற்றியிருக்க அரசர் அரண்மனை இவற்றிற்கு நடுமையாக அமைந்திருந்தது. இதனால் இத்தகைய அமைப்பு இந்திரனின் அமரர்பதிக்கும் கிடையாது என்று எட்டுத்திசையும் தன்னைப் போற்றுமாறு பிராபல்யம் அடைந்திருந்தது அந்த நகரம். மகத நாட்டின் கோநகராகிய அதற்குள் புகுந்தபோது உதயணனும் நண்பரும் வியந்தனர். ஆனால் உதயணன் மனத்தில் ஏற்பட்ட வியப்பு மீண்டும் மீண்டும் துயர நினைவுகளையே அடையச் செய்தது. வாசவதத்தையின் இதயத்தோடு கலந்து பழகிய அவன் காதல் உள்ளம் அவ்வளவு எளிதாக அவளை மற்ற நினைவுகளில் மறந்துவிட முடியவில்லை. உஞ்சை நகரில் புனலாடு துறையிலிருந்து தத்தையோடு தன் நாடு மீண்ட அன்று, அவள் யானைமேல் தன் பக்கத்தில் அமர்ந்து பயணம் செய்த இதே நிலையில் அரிட்ட நகரத்தைக் கண்டு வியந்த வியப்பும் அந்த அவசரமயமான இன்ப நினைவும், அவன் மனத்தில் தோன்றிவிட்டன போலும் இடைவிடாமல் பற்றி வாட்டும் அந்தப் பழைய எண்ணங்களில் துயரமிருந்தாலும் மற்றோர் புறம் துயரத்தோடு கலந்த ஒரு வகையான இன்பமும் தோன்றி மறைந்துகொண்டு தானிருந்தது. மற்றவர்கள் இராசகிரிய நகரின் அழகான காட்சிகளில் இலயித்து வியந்து கொண்டிருந்தபோது உதயணன் உள்ளம் மட்டும் இப்படி ஒர் இன்னல் மண்டிய நிலையில் அவனைக் கடந்த காலத்திற்கு இழுத்துச் சென்றது. மீண்டும் மீண்டும் வாசவதத்தையையே நினைக்கச் செய்தது.

திட்டமிட்டுக் கருதியவாறு மகத நாட்டிற்கு வந்து இராசகிரிய நகரத்தையும் அடைந்தாயிற்று. நண்பர் இதுவரை