பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/160

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

உதயணனைத் தங்கள் ‘நாடகத்'திற்கு ஏற்றவாறு நடிக்கச் செய்து ஆறுதலளித்து விட்டனர். மகத நாட்டிற்கு வந்து அதன் தலைநகராகிய இராசகிரிய நகரத்தை அடைந்து விட்டாலும், அங்கே யாரும் ஐயம் கொள்ளாத வகையில் தாம் தங்குவதற்கு ஏற்ற இடம் தேடும் கவலை இப்போது நண்பர்களுக்கு ஏற்பட்டது. பல்வேறு வகை நாட்டினரும், குடியினரும், தொழிலினரும் தனித்தனியே வசிக்கும் அநேகக் குடியிருப்புகள் நிறைந்தது இராசகிரிய நகரம்.

படைவீரர்களும் யவன நாட்டு வீரக்குடி மக்களும் குடியேறி வசிக்கும் தனித்தனிச் சேரிகளே நூற்றுக்கணக்கில் அங்கே இருந்தன. சித்திர சாலைகளும் கட்டடக் கலைஞர் வாழும் இடமும் அறவுரை மன்றங்களும், புதிதாகப் பிடித்து வந்த யானைகளைப் பயிற்றும் பயிற்சி வெளியும், வருவோர்க்கு வரையாது சோறிட்டு மகிழும் அட்டிற்சாலைகளும், இன்னும் எண்ணற்ற பல பொதுஇடங்களும் அந்நகரில் பார்க்க உண்டு. தேவகோட்டங்களும், கடவுட் பள்ளிகளும் மிகுந்து விளங்கின. பூங்காக்கள் சூழ நடுநடுவே அலங்கார மேடைகளும், சிறுசிறு பூம்பொய்கைகளும் சுற்றி அழகு செய்யத் தோன்றும் காமன் கோவில்தான் அந்த நகரிலேயே அதிக எழில் அமைந்தது. இந்தக் காமன் கோவில் புறநகரில் இடம் பெற்றிருந்தது. இதன் வடபுறம் பூஞ்சோலையை ஒட்டிப் படியும் துறைகளுமாகக் கவின்கொண்டு காணும் கட்டுக் குளம் ஒன்றுண்டு. அதற்கு அப்பால் பசும் போர்வை போர்த்த நிலமகள் மேனிபோலப் பரந்த வயல் வெளி காணப்படும். இக் குளத்தின் கரையில் முனிவர்களும் அந்தணர்களும் தங்கிவாழும் தாபதப் பள்ளி ஒன்றும் அமைந்திருந்தது.

காமதேவன் கோவிலும் தாபதப் பள்ளியும் ஒன்றுக்கொன்று மிகச் சமீபத்திலேயே இருந்தன. இரண்டையும் இணைக்கும் சோலைக்கு நடுவே போய் வருவதற்கு ஏற்ற விரிந்த வழியும் உண்டு. அங்கங்கே புன்னை, கமுகு, தென்னை முதலிய வளர்ந்த மரவகைகளும், நிலத்தில் தங்கி