பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/161

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இராசகிரிய நகரம்

159

யுள்ள நீரின்மேல் நெருப்பே மலராக விரிந்ததுபோலத் தாமரைத் தடாகங்களும், வயல்வெளியில் மேலே வெண்பட்டுக் கொடிகள் போலப் பறந்து செல்லும் நாரைக் கூட்டங்களுமாக, இவ்விரண்டும் அமைந்திருந்த சூழ்நிலை மனத்தைக் கவரக் கூடியதாக இருந்தது. எனவே உதயணனும் நண்பர்களும், ஊருக்கு ஒதுங்கிப் புறநகரில் ஒரு பகுதியாக அமைந்திருந்த இந்தத் தாபதப் பள்ளியைத் தாம் வசிப்பதற்கு ஏற்ற இடமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். தங்குமிடம் பற்றிய கவலை அவர்களுக்கு இப்போது நீங்கிற்று. அங்கும் கூட மற்றவர்களுடைய பழக்கம் மிகுதியாக இல்லாத ஒரு பகுதியையே தங்களுக்கு உரிய இடமாக அமைத்துக் கொண்டனர். இங்கே தங்கியபின்பும் உதயணனின் துயரவேகம் தணிந்தபாடில்லை. இசைச்சன் கூறிய வார்த்தைகளை எண்ணி அவற்றில் அவன் நம்பிக்கை வைத்திருந்ததால், அந்த நம்பிக்கை அழிந்துவிடாமல் இருப்பதற்காகவாவது நண்பர்கள் சூழ்ச்சிசெய்ய வேண்டியிருந்தது.

தவ ஒழுக்கத்தால் தெய்வீக ஒளிபெற்று அழகுடனே விளங்கும், ‘காகதுண்டக முனிவர்’ என்னும் முனிவரிடம் தங்கள் நிலையை எடுத்துரைத்துத் தாங்கள் செய்திருக்கும் தந்திரத்துக்கு ஏற்ப உதயணனிடம் நடந்துகொண்டு, அவனுக்கு நம்பிக்கையூட்டுமாறு நண்பர் வேண்டிக்கொண்டனர். அதன்படியே அந்த முனிவர் உதயணன்பால் வந்து, “இரண்டு மாதகாலம் விரத ஒழுக்கத்தை மேற்கொண்டு தத்தையைப் பற்றிய துயர நினைவுகள் மனத்தில் எழவும் செய்யாதபடி, ஐம்புலன்களையும் காத்து ஒழுகினால் இறந்து போன அவளை நீ பெறுவது எளிது” என்று வற்புறுத்திக் கூறிவிட்டுச் சென்றார். அவர் சென்ற பிறகு உருமண்ணுவா முதலிய நண்பர், “எத்தனையோ பல அருஞ்செயல்களை மந்திர வலிமையால் செய்து காட்டுபவர்களைக் கண்டும் கேட்டும் இருக்கிறோம். ஆனால், செத்தவர்களை உயிர்ப்பிக்கும் வித்தையை மந்திரத்தால் நிகழ்த்துவோரைக் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை. ஏதோ நம்முடைய புண்ணிய