பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாய யானை

15

அங்கிருந்து ஊமைபோல் நடித்த யூகியின் ஒற்றனொருவன் உடனே யூகிக்குத் தெரியச் செய்துவிட்டான். யூகி விழித்துக் கொண்டான். அன்றிலிருந்து தன் மார்பிலிருந்த வடு தெரியாதபடி மறைத்துக்கொண்டு உஞ்சையில் நடமாடத் தொடங்கினான் யூகி. ஒருநாள் நள்ளிரவு யூகி, அஞ்சத்தக்கதொரு பேய் வடிவங்கொண்டு நகருட் புகுந்து, அரசனுடைய பட்டத்து யானையான நளகிரி இருக்கும் கொட்டிலுக்குச் சென்று, ஒரு மருந்தைக் கொடுத்து அதை மிகப்பெரிய மத வெறியடையச் செய்துவிட்டுத் திரும்பினான். மறுநாள் பொழுது விடிந்தது. நளகிரி உஞ்சை நகருக்கு நமனாயிற்று. அதன் மதத்தால் ஊர் அழிபட்டது. எதிர்ப்பட்ட மக்களைத் தன்னுடைய கொம்பில் குத்தி மாலை தொடுத்தது நளகிரி. பாகர்களால் யானையை அடக்க முடியவில்லை. இன்னும் இப்படியே சிறிது நேரம் பொறுத்தாலோ ஊர் சுடுகாடாகிப் போகும். பிரச்சோதனன் செய்வதறியாது திகைத்துப் போனான். இந்தத்தருவாயில் மந்திரி சாலங்காயன், அரசனிடம் உதயணன்பால் உள்ள கோடபதி என்னும் யாழின் சிறப்பையும், உதயணன் ஒருவனே யாழை வாசித்து நளகிரியை அடக்க முடியும் என்பதையும் கூறினான். "வஞ்சனையாற் கைப்பற்றி வன்சிறையில் அடைத்தேன். அவனிடம் போய் நான் உதவி கேட்பது எவ்வாறு?" - பிரச்சோதனன் இவ்வாறு கூறி நாணினான். பின் அரசன் சம்மதம் பெற்றுச் சிவேதன் என்னும் மந்திரி, உதயணனிடம் சென்று எல்லா விவரங்களையும் கூறிப் பகைமை பாராட்டாமல் உஞ்சை நகரை யானை வாயிலிருந்து காத்தளிக்குமாறு வேண்டினான். உதயணன் அதற்கு உடன்பட்டு வெளியே வந்தான். கோடபதியின் கோலாகலமான இசைவெள்ளம், நளகிரியின் மதத்தைப் போக்கி அதனை உதயணன் அடிமையாக்கிற்று. நளகிரியின் மேலேறி மன்னன் துயர்போக்கி வந்தான் உதயணன். பிரச்சோதனன் தன் துயர்தீர்த்த தகைசால் வள்ளல் உதயணனைக் காணத் தேவியரோடும் புதல்வி வாசவதத்தையோடும் அரண்மனை முன்புறம் புலிமுக மாடத்துக்கு வந்தான்.