பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/170

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

கலக்கமடைந்து இருந்தனர். அவர்கள் கலக்கம், காதலோடு கூடிய கலக்கம்! கண்ட காட்சியால் தோன்றிய இந்தக் கலக்கம் தீர்வதென்பது, திருப்திக்குப் பின்புதானென்று இருவரும் நம்பினர்.

அன்று இரவு முழுவதும் இதே துயருடன் கழிந்தது. உலகிற்கு எல்லாம் குளிர் நிலவு பொழிந்து காக்கும் சந்திரன், அன்று இவர்கள் இருவருக்கும் உறக்கம் இல்லாமற் செய்த பாவத்தைப் பெற்றவனாக மறைந்தான். பொழுதுவிடியத் தொடங்கியது. அன்று காலை விடிந்தபோது உலகிற் கெல்லாம் விடிந்ததுபோல இன்பமாக உதயணனுக்கும் பதுமாபதிக்கும் விடியவில்லை. நெருப்பினால் புண்பட்ட இடத்திற் சந்தனக் குழம்பை ஊற்றியதுபோல் இரவுபட்ட கலக்கந் தீர ஒருவரை ஒருவர் காணலாம் என்ற ஆசையோடு காலை விடிந்தது.

காதல் மனோபாவம் என்பது மட்டுமே உலகளாவிய தனிப் பெருங்காயம் போன்றது. அதில் ஊடுருவித் தோன்றும் பல்வேறு விதமான இன்ப துன்ப உணர்ச்சிகளில் ஒரு வகையான செளந்தரியமும் கவர்ச்சியும் உண்டு. உதயணன்பதுமாபதி சந்திப்பிலும், அதன் பின்னர் வரும் கலக்கத்திலும் மேற்கூறிய காவிய அழகு தோன்றுகிறது.

தன் உள்ளங் கவர்ந்த கள்வனை அன்று காமன் கோவிலில் எவ்வாறேனும் காணலாம் என்ற ஆசையுடன், துக்கம் இல்லாமையால் கலங்கியிருந்த கண்களைக் கழுவிய பின், தெய்வத்தை வழிபட்டாள் பதுமாபதி. முதல் நாள் முழுவதும் இரவு உறக்கம் இழந்து சோர்ந்து போயிருந்த பதுமையை அந் நிலையிற் கண்ட தோழியரும் செவிலி முதலிய தாயர்களும் ஆதுரத்தோடு வினாவினர். “நேற்று வண்டியில் செல்லும்போது உடல் வருந்திய வருத்தமோ? காமன் கோவிலில் வேறு ஏதாவது துஷ்ட தெய்வங்கள் தீண்டி விட்டனவோ? கோவிலில் மாடத்தை வலம் வரும்போது கால்கொப்புளங் கொண்டதோ? பொய்கையில் நெடுநேரம் நீராடியதினால் கண்கள் சிவப்பேறித் தோள்கள் சோர்வடைந்