பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/177

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தை புகுந்த செல்வன்

175

நகத்தால் சித்திரங்களாகக் கீறி, அதையும் கையிற் கொண்டு புறப்பட்டான். சித்திர வண்டியின் திரைச் சீலை விலகிய போது இருவர் கண்களும் சந்தித்த நிகழ்ச்சியில் ஆரம்பித்து, அவள் உதயணனிடம் பந்து வேண்டிக் குறிப்புக் காட்டியது ஈறாக அவ்வளவு நிகழ்ச்சிகளும் இலையில் இடம் பெற்றிருந்தன. புன்னை முதலிய மரங்கள் செறிந்திருந்த மிக அடர்த்தியான பகுதியில் பதுமையின் கண்களுக்குத் தெரியுமாறு, அவளும் காணும்படி அம்மாலையும் வாழை இலையும் ஒரு மரக் கிளையில் கட்டித் தொங்கவிடப் பெற்றன. இது முடிந்ததும் உதயணன் நண்பர் முதலியோர், தனித்தனியே மறைந்திருந்து பதுமையின் வரவை எதிர் பார்த்தனர். மறைவிலிருந்த யாவருடைய கண்களும் நடக்க இருப்பதை ஆவலோடு நோக்கிக் கொண்டிருந்தன.

பதுமை தன் ஆயத்து மகளிர் கூட்டத்திலிருந்து விலகி, யாப்பியாயினி என்னும் பார்ப்பனத் தோழியுடன் நீராடுங் கருத்துக்கொண்டு, பொய்கைப் பக்கமாக வந்தாள். முழங்கால் ஆழமுள்ள பொய்கையின் முன்பகுதியிலேயே வெகு நேரம் குழைந்து விளையாடினாள். நீராடி முடிந்தபின் கார் முகில்போல நீண்டு வளர்ந்திருந்த தன் கூந்தலை நீரறப் புலர்த்தினாள். சிற்சில அணிகலன்களையும் அணிந்து அலங்காரம் செய்துகொண்டாள். இவ்வளவும் செய்யும் போதே அவள் கரங்கள், உதயணன் தனக்காகவே அங்கு வைத்துவிட்டுச் சென்ற கண்ணியை எடுக்கத் துறுதுறுத்துக் கொண்டிருந்தன. சுற்றும் முற்றும் நோக்கிக்கொண்டே பதுமை, புன்னை மரத்தின் மிகத் தாழ்ந்த அந்தக் கிளையை நெருங்கினாள். கிளையில் தொங்கிய வாழை இலையில் சித்திரங்களைக் கண்டு தனக்குள்ளே வெட்கந் தோன்ற நகைத்துக் கொண்டாள். அடுத்த கணம் உதயணன் தொங்க விட்டிருந்த மாலையை எடுத்து மார்போடு அனைத்துக் கொண்டாள். அவள் இவ்வளவும் செய்யும்போது யாப்பியாயினி ஏதோ செயலாகப் பக்கத்தில் சென்றிருந்தாள். அவள் வருவதற்குள், அதே மரக்கிளையில் தன் பெயருடன் கூடிய மோதிரம் ஒன்றையும் மலர்மாலை ஒன்றையும் உதயணனுக்காக, அவன் எடுத்துக் கொள்ளும்படி பதுமை வைத்தாள். பின்