பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/179

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தை புகுந்த செல்வன்

177

கொண்ட நண்பர், அதற்கேற்றபடி மேல்திட்டங்களை வடிக்கக் கருதிச் சிந்திக்கத் தொடங்கினர். இதை ஒரு சாதாரண நிகழ்ச்சியாக எண்ணி ஒதுக்கிவிடுவதற்கும் இல்லை. ஏனென்றால் இதனாலேயே அவர்கள் சூழ்ச்சி, மாறுவேடம் யாவும் அம்பலமானாலும் ஆகிவிடலாம் அல்லவா! எனவே, தான் நண்பர்கள் இதைப் பற்றிய சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுக்கும்படியாக நேர்ந்தது.

அப்போது மரத்தடியில் பதுமை உதயணனுக்காக வைத்துவிட்டுச் சென்ற மோதிரம், மாலை ஆகியவைகளுடன் வயந்தகன் உள்ளே பிரவேசித்தான். உதயணனைத் தேடித் தோட்டத்துக்குள் சுற்றியபோது, அந்த மோதிரத்துடன் மாலையும் புன்னை மரக்கிளையில் இருந்ததாகவும், தான் அவற்றை உதயணனிடம் அளிக்கக் கொணர்ந்ததாகவும், சொல்லிவிட்டு அவற்றை உதயணனிடம் சேர்ப்பித்தான் வயந்தகன். அவற்றைப் பெற்றுக்கொண்ட உதயணன் தானும் அதே பொய்கையில் உருமண்ணுவாவுடன் சென்று நீராடி, வேறுடை உடுத்தியபின் மோதிரத்தையும் மாலையையும் அணிந்துகொண்டான். பதுமையின் நினைவு மயக்கம் அவன் நெஞ்சில் தோன்றியது. அவள் கொடுத்த மாலையும் மோதிரமும் தாபத்தைத் தணித்தன. இவ்வாறு காதலர் இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர். மனத்தையும் நினைவுகளால் பரிமாறிக் கொண்டிருந்தனர்.

தான் வைத்த மோதிரத்தையும் மாலையையும் உதயணன் அணிந்திருப்பதனைக் கண்ணாரக் கண்டபின்பே பதுமாபதி அங்கிருந்து அரண்மனைக்குப் புறப்பட்டாள். அங்ஙனம் புறப்படும்போது அவள் அவனைப் பார்த்த பார்வை எவ்வளவோ பொருள் பொதிந்ததாக இருந்தது. ‘நம்முடைய காதல் நேற்றுவரை கண்களின் பார்வையளவில் இருந்தது. இன்றோ ஒருவர் மாலையை மற்றொருவர் மாற்றிக் கொள்ளும் அளவு வளர்ச்சியடைந்திருக்கிறது’ என்று அவள் தன் மனத்திற்குள்ளேயே பேசிக்கொள்வதுபோல் இருந்தது அந்தப் பார்வை. இந்தப் பார்வையோடு அவனிடம்

வெ.மு- 12