பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/183

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இருளில் நிகழ்ந்த சந்திப்பு

181

மனம், இதற்கென்று ஒரு திட்டத்தையும் கூட வகுத்துக் கொண்டுவிட்டது.

சில நாள்களில் அந்தி மயங்கிய பிறகு, இரவு நேரங்களிலும் பதுமை காமன் கோட்டத்திற்கு வழிபாடு செய்ய வந்துபோவது வழக்கம். இத்தகைய நாள் ஒன்றில் கோவிலின் உட்புறத்தில் அதிகம் ஒளியற்ற பகுதியாகிய மணவறை ஒன்றில் அவளைச் சந்தித்து விடுவது என்று உதயணன் திட்டஞ் செய்து வைத்துக் கொண்டான். அந்த மணவறைக்குள், பதுமையைப் போன்ற தகுதியாற் பெருமை மிக்கவர்கள் தவிரப் பிறர் நுழைய முடியாது என்பதும், ஒளி மிகுந்திராது என்பதுவும் உதயணனுக்கு ஏற்ற வசதிகளாகப் பட்டன. காமன் கோட்டத்திற்கு வந்தால், என்றுமே அந்த மணவறைக்குள் நுழையாமல் பதுமை திரும்பிச் செல்வது இல்லை என்ற வழக்கமும் உதயணனுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. அவளைத் தனிமையில் சந்திப்பதற்கு இதைத் தவிர வேறு வழி எதுவும் அவனுக்குப் புலப்படவில்லை. இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்னால், நண்பர்களிடமும் கூறிவிடுதல் நல்லது என்றெண்ணிய அவன் அவ்வாறே கூறினான். “தன் அழகாகிய மத்தினால் என் அன்புக் கயிற்றை இட்டு இடையறாது உள்ளத்தைக் கடைகின்றாள் பதுமை. அவளைத் தனிமையிலே சந்திக்க வேண்டும் என்று என் மனத்தில் எழும் ஆசையை என்னால் அடக்க முடியவில்லை. காமன் கோட்டத்தின் உள்ளே இருக்கும் மணவறை மாடத்தில் அவளைச் சந்திக்கலாம் என்று கருதியிருக்கிறேன். அவள் சிறிதும் எதிர்பாராத நிலையில் இருளிடையே அவள் முன் தோன்ற வேண்டும். அதைக் கண்டு நாணத்தோடு அவள் தலைகுனிந்து நிற்கும் போது அந்த நகை முகத்தின் அழகையும் விழிகளின் குறு குறுப்பையும் கண்களால் கண்டு அனுபவிக்க வேண்டும். நெஞ்சத்தைக் கலக்கித் துடிதுடிக்கச் செய்யும் இந்த ஆசையை எவ்வளவோ முயன்று பார்த்தும் என்னால் நீக்கிவிட முடியவில்லை” என்று உதயணன் கூறி முடித்தபோது