பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/184

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

உருமண்ணுவா முதலிய அவனுடைய நண்பர்கள் அதைக் கேட்டுத் தயங்கினர்; திகைத்தனர்!

உதயணன் கூறிய திட்டம் நண்பர்களை அஞ்சுமாறு செய்தது. ‘வீரமும் ஆண்மையும் பல்கலை வல்லமையும் பொருந்திய உதயணன்தானா அவ்வாறு கூறுவது?’ என்று கூட ஐயப்பட்டனர் அவர்கள். அவன் கூறிய திட்டம் இடையிலே பிறழ்ந்து விடுமாயின், அதனால் அவனுக்கும் அவனுடன் வந்த நண்பர்களாகிய தங்களுக்கும் எவ்வளவு பெரிய பழி நேரும் என்பதை எண்ணிப் பார்க்கும்போதே அவர்கள் நடுங்கினர். உதயணன் திட்டத்தையும் நண்பர்கள் காரணங் காட்டி மறுத்தனர்.

“ஏதாவது தவறு நேர்ந்து சூழ்ச்சிகள் யாவும் வெளிப்பட்டு விடுமானால் நாளைக்கு அறிந்த மனிதர்கள் யார் மேல் குற்றங் கூறுவார்கள்? ‘உதயணன் நண்பர் அவனோடு துறவிகள்போல மாறுவேடங் கொண்டு மகத நாட்டிற்கு அவனை அழைத்துச் சென்றனர். அங்கே உதயணனுக்கு நல்ல நெறி காட்டி முன்னேற்றங் கொடுக்கத் தெரியாமல் பதுமையோடு மறைவாகக் காதல் புரியவே அவனுக்குத் துணைசெய்தனர். இந்த நண்பர்களுக்குச் சிறிதேனும் நுண்ணறிவு இருந்தால் உதயணனைத் தவறான வழிக்குச் செல்ல விட்டிருப்பார்களா இவர்கள்?’ என்றெல்லாம் நாங்கள் எதிர்காலத்தின் பழிப்புக்கு ஆளாக வேண்டியிருக்கும்! மேலும் நீ கூறுகிறவாறே காமன் கோட்டத்தின் உட்பகுதியிலுள்ள மணவறை மாடத்தில் ஒளிந்து கொண்டு அவள் அதனுள் வரும்போது சந்திக்கிறாய் என்றே வைத்துக் கொள்வோம். பதுமை மாடத்திற்குள் நுழைவதற்கு முன்னால், அவளுடன் அரண்மனையிலிருந்து வரும் காவலர்கள் அதனுள் புகுந்து பரிசோதனை செய்தால் ஒளிந்து கொண்டிருக்கும் நீ அகப்பட்டுக்கொள்ள வேண்டியது ஆகும். நீ இரவலன்போல மாறுவேடத்தில் அங்கே செல்லப் போகிறாய்! ஆனால் உன்னைக் காண்பவர்கள் உனது எடுப்பான தோற்றத்தினையும் முகச்சாயையும் பார்த்தே