பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/188

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

186

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

இருப்பதைக் கண்ட் தோழி யாப்பியாயினி மட்டும் நுணுக்கமாகச் சிந்தித்துப் பதுமையின்மேல் சிறிது ஐயங்கொண்டாள்.

36. அரண்மனைத் தொடர்பு

காமன் கோட்டத்தின் உட்புறத்திலிருந்து தோழியரோடு வெளியேறிச் சென்ற பதுமை, வையத்திலேறிய பின்பும் உதயணனைப் பற்றிய இனிய நினைவுகளோடுதான் அரண்மனைக்குப் புறப்பட்டாள். எல்லோரும் கோட்டத்திலிருந்து வெளியே சென்றபின்பு, உதயணன் இருள்நிறைந்த மணவறை மாடத்திலிருந்து வெளியே வந்தான். அவனுடைய நெஞ்சு நிறையப் பதுமையைப் பற்றிய இன்ப நினைவுகள் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தன. தவப் பள்ளிக்கு அவன் செல்லும்போது இரவு வெகுநேரமா யிருந்ததை அங்கிருந்து அமைதி நிலையினாலேயே அவன் அறிந்து கொண்டான். தானும் தன் நண்பர்களும் இனியும் அதே தவப் பள்ளியில் தங்கியிருப்பது அங்குள்ளவர்கள் சந்தேகமுற ஏதுவாகும் என்ற சிந்தனை உதயணனுக்கு இப்போது உதித்தது. தங்களுக்குள் அடிக்கடி நிகழும் வாக்குவாதங்களையும் பேச்சுக்களையும் பிறர் கேட்க நேர்ந்தால், மாறுவேடம் வெளிப்படையாகிவிடுமே என்ற அச்சமும் அவனுக்கு இருந்தது. தான் அடிக்கடி காமன் கோட்டத்தின் பக்கம் சென்று வருவதனால்கூடப் பிறர் தன்னைத் தவறாக எண்ண நேரிடும் என்று எண்ணினான் அவன். இந்தச் சிந்தனையின் பயனாக உதயணன் ஒரு முடிவுக்கு வந்தான். ‘மறுநாள் எப்படியும் மகத வேந்தன் தருசகனுடைய அரண்மனையில், மாறுவேடத்துடன் ஏதாவது ஒருவேலையிற் சிறந்தவனாகச் சொல்லிக்கொண்டு அமர்ந்து விடவேண்டும். தருசகனுக்கு எந்தவகைத் தொழிலில் விருப்பம் அதிகம் என்று முன்பே தெரிந்துகொண்டுவிட வேண்டும்’ என்பவைதாம் உதயணனுடைய அந்த முடிவுக்குள் அடங்கியிருந்தன. பதுமையின் காதலை வளர்த்துக் கொள்வதற்கும் சரி. மற்றவற்றிற்கும் சரி அரண்மனைத் தொடர்பு மிகமிக ஏற்றதாகவும் அவனுக்குத் தென்பட்டது. இன்னும் சில நாள்கள் இதே முறையில் காமன்