பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/190

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

188

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

பவர்களைக் கண்டால் எங்கள் அரசன் அவர்களைக் கடவுள் போலக் கருதிக் கொண்டாடுவான். ஆயினும் இதுவரை வந்த ஒர் அறிஞராவது எம்மரசனின் தந்தையினுடைய புதையல் இருக்கும் இடத்தை அவருக்குச் சரியாகக் கூறவில்லை. இருந்தாலும் அவருக்கு இன்னும் புதையல் இருக்குமிடத்தைக் கண்டு சொல்பவர்கள்மேல் அன்போ ஆதரவோ சிறிதும் குறையவே இல்லை” என்று காவலன் உதயணனுக்குச் சொல்லி முடித்தான்.

காவலன் இவ்வாறு கூறி நிறுத்தவும் உதயணன் தன் முகத்தில் மிகுந்த வியப்புத் தோன்றுமாறு செய்துகொண்டே “எவ்வளவு பொருத்தம்! உங்கள் அரசர் எந்த வித்தையை அதிகம் விரும்புவதாக நீங்கள் கூறினர்களோ, அதே வித்தையில் நான் மிகவும் வல்லவன். நான் எண்ணி வந்ததுபோலவே இங்கும் இருக்கிறது பார்த்தீர்களா?” என்று தொடங்கிப் புதையல் இருக்குமிடத்தை அறியும் தன் கலை வன்மையை அவனிடம் விவரிக்கலானான். “முன்னோர் புதைத்து வைத்திருக்கும் புதையல்கள் இருக்கும் இடங்களை அறிந்து கூறுவதில் எனக்கு நல்ல பயிற்சி உண்டு. இதற்குமுன் பல இடங்களில் அத்தகைய புதையல்களைக் கண்டுபிடித்துக் கூறி அவற்றுக்கு உரியவர்களிடம் நற்பெயர் பெற்றுள்ளேன். இது தவிர வேறு பல திறமைகளும் என்பால் உள்ளன. அரண்மனைக்குள் எங்கெங்கே கிணறுகளும் பொய்கைகளும் தோண்டினால் நல்ல நீருற்றுக்கள் இருக்கும் என்பதை நான் நிலத்தைப் பார்த்தவுடனே சொல்லுவேன். நிலத்தினுள்ளே மறைந்திருக்கும் பொருள்களை அறிவதற்கு வழிகூறும் நூல்கள் பலவற்றை நான் நன்கு ஆராய்ச்சி செய்திருக்கின்றேன். உங்களுடைய அரசனுள்ளத்தை வருத்துகிற குறையையும் என்னால் தீர்த்து வைக்க முடியும் என்று எண்ணுகிறேன்” என்று உதயணன் கூறியவற்றை எல்லாம் கேட்டுக் கொண்டே அந்தக் காவலன் மன மகிழ்ச்சியோடு உள்ளே சென்றான்.

காவலன் வேந்தனின் இருப்பிடத்திற்குச் சென்று, “புதையலெடுத்தல், நிலத்தினுள் மறைந்திருப்பவற்றைக்