பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/198

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

யாப்பியாயினி “அரசி மிகவும் களைப்புற்றிருக்கின்றமையினால் தனியாக இந்த மூடு பல்லக்கிலேயே ஏறிச் செல்லட்டும்” என்று காவலர்களை நோக்கிக் கூறினாள். காவலர்கள் பல்லக்கைத் துக்கினர். பதுமை பல்லக்கின் திரைச் சீலை காற்றிலே ஒதுங்கி விடாமல் இறுக இழுத்துப் போர்த்தினாள். வண்டோடு கூடிய தாமரை மலர்போல இருந்தது அவள் உதயணனோடு பல்லக்கினுள் இருந்த நிலை. யாப்பியாயினிதான் பதுமையிடம் முன்பே பெற்றிருந்த ஏவலின்படி, “இப் பல்லக்கைத் தேவியின் அந்தப் புரத்திலுள்ள கன்னிமாடத்தில் பதுமையின் பள்ளியறை அருகிலே தவிர வேறு எங்கும் நிறுத்தவோ வைக்கவோ கூடாது” என்று தூக்குபவர்களை நோக்கிச் சொன்னாள். பல வீதிகளையும் சோலைகளையும் கடந்து, சிவிகை அரண்மனையில் பதுமையின் கன்னிமாடத்திற்குள் புகுந்தது. உடன் வந்தவர்கள் வெளியிலேயே தங்கிவிட்டனர்.

38. பதுமையின் சினம்

ல்லக்கைத் தூக்கி வந்தவர்கள் பதுமையின் கன்னி மாடத்திற்குள் நுழைந்து பள்ளியறை வாயிலில் அதை இறக்கியபோது தோழி அயிராபதி விசிறியோடு பணிவாகக் காத்துக் கொண்டிருந்தாள். மயிற் பீலியினால் இயற்றப்பட்ட பெரிய ஆலவட்டம் அவள் கையிலிருந்தது. அவள் ஒரு புறமாக ஒதுங்கிச் சென்றபின் பதுமை உதயணனைப் பல்லக்கில் இருந்து வெளிப்படுத்தித் தன் பள்ளியறைக்குள்ளே அழைத்துச் சென்றாள். கன்னிமாடத்திலும் அதனுள் இருக்கும் பிற பகுதிகளிலும் அயலார் யாரும் இல்லை என்பதைப் பதுமை அப்போதே சுற்றிப் பார்த்துத் தெரிந்து கொண்டாள். இனி அயலவர்களை மிகுதியாக நடமாட விடக்கூடாது என்றும் தனக்கு மிகவும் வேண்டிய தோழிகள் சிலரிடம் கூறியிருந்தாள். அன்றிலிருந்து யாழ், இசை முதலிய கலைகளைத் தான் மீண்டும் தெளிவாகக் கற்கப் போவதால் தனக்குக் கன்னிமாடத்திற்கே உணவைக் கொண்டுவந்து