பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/199

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பதுமையின் சினம்

197

விடுமாறு கூறிவிட்டாள் பதுமை. யாப்பியாயினி என்ற தோழி பதுமைக்கு வேண்டிய உதவிகளை எல்லாம் விருப்பத்தோடு அந்தரங்கமாகச் செய்து வந்தாள். கன்னிமாடத்தின் ஏழாவது மாடத்தில் இருந்தது பதுமையின் பள்ளியறை. பதுமையின் கன்னிமாடத்திற்கு உதயணன் வந்த பின்னர் நாட்கள் வரிசையாகக் கழிந்து கொண்டிருந்தன. தோழி யாப்பியாயினி, பதுமை இவ்விருவர் தவிர வேறு எவரும் உதயணன் அங்கிருப்பதை அறியார்.

வேறு ஓர் இடமாக இருந்தால் உதயணனுக்கு இந்த மறைவு வாழ்க்கை அலுத்துப் போயிருக்கும். பதுமையின் காதலிலும், அவள் தனியாகத் தன்னை மறைத்து வைத்துப் பேணுவதிலும் அவன் அடைந்த இன்பம் நிகரற்றது. அந்த இன்பம்தான் அவனை அத்தகைய மறைவு வாழ்க்கைக்கு ஒப்புக் கொள்ளச் செய்தது. முழுமதியும் உரோகிணியும் ஒன்றுபட்டதுபோல அவனும் பதுமையும் அங்கே ஒன்று பட்டிருந்தனர். ‘உதயணன் எங்கே எவ்வாறு இருக்கிறான்?’ என்ற விவரம் முற்றிலும் தெரியவில்லை. எனினும், ‘அவன் எப்படியும் பதுமையோடு அரண்மனைக்குள்ளேதான் இருக்க வேண்டும்’ என்று உருமண்ணுவா முதலியோர் நுட்பமாக அனுமானித்து அறிந்துகொண்டனர். அவர்கள் அரண்மனையின் பிற பகுதிகளாகிய இடங்களில் வழக்கம்போல் மாறு வேடத்தோடு தங்கள் வேலையைக் கவனித்து வந்தனர். உதயணனோ ஆடவர்கள் என்றுமே புகமுடியாத அரண்மனையின் உட்பகுதியில், கன்னிமாடத்தின் ஏழாவது மாடத்திலே, அவர்கள் அறியாதபடி பதுமையோடு வசித்து வந்தான். இங்ஙனம் பதுமையோடு வசித்து வரும்பொழுது, அவள் தன்மேல் காட்டும் அளவு கடந்த காதலால், ‘பதுமை நம்மை ஏதேனும் சூழ்ச்சியில் ஆழ்த்துவதற்கு எண்ணி இப்படிக் கன்னிமாடத்தில் சிறைப்பிடித்து வைத்திருக்கிறாளோ?’ என்று சில சமயங்களில் விளையாட்டும் வினையும் கலந்த சந்தேக எண்ணங்கள்கூட உதயணனுக்குத் தோன்றும்.

‘ஏதோ? எப்படியோ? எந்தச் சமயத்தில் நமக்கு என்ன நேருமோ? எதற்கும் நாம்தான் முன்னேற்பாட்டுடன் இருக்க