பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/200

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

198

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

வேண்டும்’ என்று எண்ணிய உதயணன், பதுமையினுடைய தோழியாகிய யாப்பியாயினியைக் கொண்டு இராசகிரிய நகரத்தையும் அதில் அரண்மனையின் அமைப்பையும் விளக்கத்தக்க சித்திரம் ஒன்றை எழுதி வாங்கி வருமாறு செய்தான்.

அவன் விருப்பப்படி அவள் எழுதுவித்துக் கொணர்ந்த அந்தச் சித்திரத்தால், அரண்மனையின் ஒவ்வோரிடமும் எங்கெங்கே எப்படி அமைந்திருக்கிறது என்பதையும், தான் இருக்கும் கன்னிமாடத்திலிருந்து தப்பிச்செல்ல வேண்டுமானால் எப்படித் தப்பிச் செல்லலாம் என்பதையும், உதயணன் நன்கு அறிந்து வைத்துக் கொண்டான். தருசக வேந்தனுடைய நாட்டின் பரப்பு, படைவன்மை முதலிய யாவற்றையும் அறிந்துகொண்டபின், அவசியமானால் அவனை வெல்லும் திறமைகூடத் தனக்கு உண்டு என்று துணிந்தான் உதயணன். சூழ்ச்சிகள் எவையேனும் நேருமானால் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றுதான் அவன் அந்த ஒவியத்தை முன்னேற்பாடாக வாங்கி வைத்துக் கொண்டிருந்தான். மேலும் தான் அங்கே கன்னிமாடத்தில் அதிகநாள் தங்குவதனால் தனக்கு எந்த வகையிலும் கேடில்லை என்று உறுதி செய்துகொள்ளவும் இது உதவியது. பதுமை தான் யாழ் முதலியன கற்கப்போவதால் கன்னி மாடத்திற்கே உணவைக் கொண்டு வந்துவிடும்படி முன்பே ஏற்பாடு செய்திருப்பினும், அதனால்கூட உதயணனுக்கும் அவளுக்கும் சிற்சில துன்பங்கள் நேரலாயின. உணவு கொண்டு வரும்போது பதுமையின் நற்றாய், செவிலித்தாய், மிக நெருங்கி உடன் பிறந்தோர் போலப் பழகிவிட்ட சில தோழிப்பெண்கள் ஆகியவர்களும் சில சமயங்களில் கன்னி மாடத்திற்குள் வந்துபோகத் தலைப்பட்டனர். இதனால் மேலே எழுநிலை மாடத்தில் சரியான நேரத்தில் உதயணன் உணவுகொள்ள முடியாமல் போயிற்று. பதுமை ஒருத்திக்கு வரும் உணவுதான் உதயணன் வயிற்றையும் நிரப்பி வந்தது. மேற்கூறியவர்கள் அடிக்கடி வந்து பேசியும் பொழுது போக்கியும் பதுமையின் நேரத்தைக் கவர்ந்து கொண்டதனால்