பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/201

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பதுமையின் சினம்

199

அவளுக்கு உதயணனோடு செலவழிக்க மிகக்குறைந்த நேரமே எஞ்சியது.

உதயணன் நிலையும் இதனால் கூட்டில் தனியே அடைக்கப்பட்ட கிளியினது நிலையைப் போலாகிவிட்டது. உரிய காலத்தில் தனது உணவில் அவனுக்குப் பங்கிட்டுக் கொடுக்க முடியாமல், பதுமை உண்ணும்போது அங்கு வந்தவர்கள் பக்கத்தில் அமர்ந்து விடுவார்கள். அது ஒன்று தான், இவை யாவினும் பதுமையின் மனத்தை அதிகமாகத் துன்புறுத்தியது. இந்தத் துன்பங்களிலிருந்து விடுபடுவதற்கு வழிதேடிய அவள், யாப்பியாயினியின் துணையாலேயே அதையும் அடைந்தாள். மறுநாளிலிருந்து பதுமை எழுநிலை மாடத்தில் உதயணனுடனேயே இருந்தாள். அவள் கன்னி மாடத்தின் கீழ்ப்பகுதிக்கு வரவேண்டிய அவசியமில்லாத படி, யாப்பியாயினி தானே உணவு முதலியவற்றை மேலே கொண்டுபோய்க் கொடுக்கத் தொடங்கினாள். பதுமை கலைகளை நுணுக்கமாக மனஞ்செலுத்திக் கற்பதாகக் கூறி, அவளுடைய தாயார், தோழி முதலியவர்களின் போக்கு வரவையும் கொஞ்சம் கொஞ்சமாக யாப்பியாயினி குறைத்து விட்டாள். இந்தப் பெரிய உதவியைச் செய்ததற்காகப் பதுமை யாப்பியாயினிக்கு மிகுந்த நன்றி செலுத்தினாள்.

இதன் பிறகு கன்னிமாடத்தின் மேற்பகுதிலேயே இன்பமாகக் கழிந்து வந்தன அவர்களுடைய நாள்கள். அவ்வாறு இருக்கையில் ஒருநாள் உதயணனுக்கு அங்குள்ள மாடங்களின் சித்திரம், சிற்பம் ஆகிய வேலைப்பாடுகளில் கவனம் சென்றது. அவைகள் அமைக்கப்பட்டிருந்த முறை அவனைக் கவர்ந்தது. மாடப் பேரறையில் அமைந்திருந்த கட்டிற் கால்கள் தந்தத்தினால் செய்யப்பட்டிருந்தன. பட்டு விரிப்புப் பொருந்திய கட்டிலின் மேற்கட்டியில் முத்து, பவழம் முதலியவற்றினால் கோத்த அழகிய மாலைகள் தொங்கவிடப்பட்டிருந்தன. சுற்றுப்புறத்தில் பதிந்திருந்த கண்ணாடிகளில் அவற்றின் ஒளிக்கதிர்கள் மின்னின. கட்டி லின் விளிம்புகளில் யானை, வீணை, சிங்கம், பலவகைக் கொடிகள் முதலியவை வனப்புறச் செதுக்கப் பெற்றிருந்தன.