பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/205

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காதலன் கலைநலம்

203

காட்டினாள். யாப்பியாயினி அந்தக் குறிப்பைப் புரிந்து கொண்டு உதயணனை அணுகிப் புன்னகையோடு கேட்கலானாள். “மதிப்பிற்குரிய அந்தண இளைஞரே! தங்களைப் பார்த்தால் இசை முதலிய நுண்கலைகள் பலவற்றிலும் தங்களுக்கு நல்லபயிற்சி இருக்க வேண்டும் என்று தெரிகிறது. உண்மையில் தாங்கள் எந்த எந்தக் கலைகளில் தேர்ச்சி பெற்றிருக்கிறீர்களென நாங்கள் அறிந்துகொள்ள ஆவலாயிருக்கிறோம். அருள் கூர்ந்து இதற்கு விடை கூறலமா?” என்று பணிவோடு அவனிடம் கேட்டாள். புன்னகையோடு அவள் இவ்வாறு கேட்டதும் அவள் குரலில் இருந்த பணிவு ஒருவிதமான குறிப்புடன் அமைந்திருந்ததையும் கண்டு முதலில் உதயணனுக்குச் சந்தேகம் உண்டாகிவிட்டது.

இவர்கள் நம்மைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு விட்டார்களோ என்ற அச்சம் ஒரு கணம் அவனை நடுங்கச் செய்தது. அதே நேரத்தில் தன்னிடம் அந்தத் தோழி குத்தலாகவே அப்படிக் கேட்டிருக்க வேண்டும் என்றெண்ணிக் கொண்டே அவனுக்குச் சிறிது சினமும் எழுந்தது. அப்படி இருந்தும்கூட அவன் தான் அந்தண இளைஞன், என்ற வேடத்திற்கு ஏற்றபடியே அவளுக்கு மறுமொழி சொன்னான். மறுமொழியாக அவன் சொன்ன வார்த்தைகளிலேயே அவன் மனத்தில் மூண்ட அந்தக் கோபத்தின் குறிப்பும் இலேசாகத் தொனித்தது. “வேதங்களை நன்கு பயின்ற அறிஞர்கள் பலர் இருந்தால் அவர்களுக்குமுன் என் திறமையையும் வேதநூற் பயிற்சியையும் விளக்கிக் காட்டுவேன்! அந்தண இளைஞனாகிய எனக்கு இதனைத் தவிர வேறு என்ன தெரிந்திருக்க முடியும்? இசை முதலிய கலைகளை என் போன்றார் எவ்வாறு கற்க நேர்ந்திருக்கும் தெரிந்திருந்தும் என்னிடம் நீ இந்தக் கேள்வியை விளையாடுபவள் போலக் கேட்கிறாயே? இது உனக்கே நன்றாக இருக்கிறதா? அந்தணர்களுக்கு வேத நெறியும் வைதீக ஒழுக்கமுமே தலை சிறந்த கலைகள். வேள்வி செய்யவும் அதற்குரிய கருவிகளை இயற்றவும் நான் நன்கு அறிவேன். இசைக் கருவிகளையும்