பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/209

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காதலன் கலைநலம்

207

தான் இருக்க வேண்டும் என்ற முடிவு இதனால் அவளுக்குக் கிடைத்திருந்தது. அந்த முடிவுக்கு வந்த பதுமை, ‘அவன் நீட்டும் யாழை அவன் கையிலிருந்து வாங்க வேண்டாம்’ என்று கண்பார்வையால் சங்கேதமாக யாப்பியாயினிக்குத் தெரிவித்திருந்தாள். எனவே அவன் நீட்டிய யாழைத் தோழி வாங்கிக் கொள்ளாமல் இருந்து விட்டாள். தன்னிடம் யாழை நீட்டும் உதயணனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே, “இந்த யாழை வாசித்துத் தீஞ்சுவைப் பாடல் ஒன்று பாடவேண்டும்” எனப் பதுமையின் குறிப்பைத் தோழி அவனிடம் கூறினாள். அவ்வாறு அவள் கூறியதும் உதயணன் எதிரே தொலைவில் அமர்ந்திருந்த பதுமையையும் தோழியையும் மாறி மாறிப் பார்த்தபடியே, “இவள் சிறந்த மதிநுட்பமுடையவள் நமக்கு யாழ் தெரியும் என்பதைப் புரிந்து கொண்டாள்” என்று தனக்குள் நினைத்துக் கொண்டான். “யாழ் வாசிக்கும் விதம் அறியேன் என முன்பே கூறினேனே” என்று மீண்டும் விட்டுக் கொடுக்காமலே அவளுக்கு உதயணன் விடை சொன்னான்; தனக்கு வாசிக்கத் தெரியாது என வற்புறுத்தி நம்பவைக்க முயன்றான். ஆனால் பதுமையின் தோழியா அவன் கூறிய விடையை ஏற்றுக்கொண்டு, அவனைச் சும்மா விட்டு விடுவாள்? மீண்டும் அவனை வற்புறுத்தினாள்.

தோழியும் அவனும் எப்படி வற்புறுத்தல் செய்து கொண்டிருக்கும்போது, பதுமையே வாய்திறந்து அவனோடு பேசலானாள்: “மனத்தைப் புலன்களின் வழியே ஓடவிடாமல் அடக்கி ஒரு நெறிப்படுத்திய அந்தணர்களுக்கு முடியாதது என்றும் ஒரு செயல் உண்டோ? அவர்கள் மனம் வைத்தால் எல்லாக் கலைகளிலும் தங்கள் வன்மையைக் காட்ட முடியும் உங்கள்மேல் நான் கொண்டிருக்கும் எல்லையிலாக் காதலின்மேல் ஆணையிட்டுக் கேட்டுக் கொள்கிறேன். இன்ப மயக்கம் அடைந்திருக்கும் நான் கேட்கும்படி நீங்கள் ஒரு பாட்டுப் பாடித்தான் ஆகவேண்டும். மறுக்காமல் பாடியருளுங்கள்” என்று கனிவான மொழிகளால் பதுமை அவனை நேரில் வேண்டிக் கொண்டாள். இதற்குள் மாலை நேரம் ஆகியிருந்தது. சாளரங்களின் வழியே முல்லைப்பூக்