பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/212

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

210

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

உதயணனிடம் கூறி வேண்டினாள். அவள் கொடுத்த யாழைக் கையிலே வாங்கிக்கொண்ட உதயணன், நேற்றுக் கூறாமல் மறைத்த அந்தச் செய்தியை இன்று வெளிப்படையாகக் கூறிவிடக் கருதினான். முதல் நாள் தொடக்கத்தில் தான் நடித்துவிட்ட நடிப்பிற்கு ஏற்ப, இன்றும் அவன் அதை மனத்தோடு மறைத்துக்கொள்ள வேண்டியதாயிற்று. நேற்று அவள் வேண்டுகோளுக்கு இணங்கி யாழ் வாசித்துவிட்டதனால் இன்றும் அதை மறுக்க வழியில்லாமல் ஒப்புக் கொள்ளும்படியாகவே நேர்ந்தது.

நேற்றே அந்த யாழிலுள்ள குற்றத்தைத் தெரியும்படி செய்து விட்டதனால் இன்றும் அதைக் கூறுவது பிழையில்லை என்று உதயணன் எண்ணினான் “இந்த யாழ் பட்டுப் போன மரத்தினாற் செய்யப்பெற்றது! இது மங்கலமும் தூய்மையும் உடையது அல்ல! எனவே இது பயன்படாது” என்று தான் சொல்லத் துணிந்ததைச் சொல்லிவிட்டுக் கைகளில் வாங்கிய யாழை அவளிடமே திருப்பிக் கொடுத்து விட்டான். இதைக் கண்ட பதுமை உடனே தன் தோழியை அருகிலழைத்து “என் தமையன் தருசக வேந்தன் எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்ததும் யவனத் தச்சன் இயற்றியதுமாகிய உயர்தரமான யாழை நீ சென்று உடனே எடுத்துவா” என ஏவினாள். யாப்பியாயினி உடனே மாடத்திலிருந்து கீழே சென்று மகர வடிவில் இயற்றப்பட்ட அந்த அழகிய யாழை எடுத்துக் கொண்டுவந்தாள். இரண்டாவதாகக் கொணர்ந்த அம்மகர யாழைக் கையில் வாங்கிக்கொண்ட உதயணன் அந்த யாழில் உறுப்புக்கள் சேர்க்கப்பட்டிருக்கும் அழகைக் கண்டு வியந்தான். ஆனால் அதிலுள்ள நரம்புகளைக் கூர்ந்து நோக்கியபடியே மீட்டிப் பார்த்தவுடன் தான் அப்படி வியந்தது பிழை என்று அவனுக்குப் புரிந்தது. “நிணம் புலர உலர்த்திடாமற் பச்சையாகக் கட்டப்பெற்ற அந் நரம்புகள் குற்றமுடையன” என்று கூறி வேறு நல்ல நரம்புகளைக் கொண்டு வருமாறு தோழியிடம் சொன்னான் அவன்.