பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/219

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சோலைமலைத் திட்டம்

217

“இன்னும் இரண்டு மாதங்கள் பொறுத்துக் கொள்ளச் சொல்! அதன்பின் பதுமையை நான் சந்திக்க வந்து சேருவேன். இப்போது நான் இன்றியமையாத சில செயல்களை மேற்கொள்ள வேண்டியவனாக இருக்கிறேன். இதை விவரமாகப் பதுமைக்கு எடுத்துச் சொல்லி, வேண்டிய ஆறுதல் கூறு” என்று அவன் கூறியவற்றைக் கேட்டுக்கொண்டு சென்றாள் அயிராபதி. அயிராபதி சென்ற பின்னர் உதயணன் சிந்தித்தான். ‘படையெடுத்து வந்திருக்கும் பகைவர்களை எதிர்க்கும் வகை தெரியாமல் தருசகன் திகைத்துக் கொண்டிருக்கும், இந்த நேரத்தில் நாமே நம்முடைய வீரர்களுடனே சென்று ஏதாவதொரு சூழ்ச்சியால் அவர்களை வென்று நம் திறமையை, தருசகனுக்குக் காட்ட வேண்டும் தருசகன் கவனத்தை நம்பக்கம் கவரவல்லதாக அமையவேண்டும், நமது அந்தத் திறமையின் வெற்றி’ என்ற எண்ணங்கள் அவன் மனத்தில் எழுந்தன. எதற்கும் தன் நண்பர்களைக் கலந்து கொண்ட பின்பே தான் செயலில் இறங்க வேண்டும் என்ற நினைவுடன், காமன் கோட்டத்தில் சந்தித்த தன் நாட்டு வீரனை அழைத்து மாறுவேடத்துடன் அரண்மனையிலிருக்கும் உருமண்ணுவாவிற்கு அவன் மூலம் இந்தச் செய்தியைக் கூறி அனுப்பினான். உதயணன் செய்தி கூறி அனுப்பிய சற்றைக்கெல்லாம் அந்த வீரன் உருமண்ணுவாவையும் கையோடு அழைத்துக்கொண்டே அங்கு வந்து சேர்ந்து விட்டான். இருவரும் வெகுநேரம் தங்களுக்குள் கலந்து ஆலோசித்தனர்.

“நம்மிடம் இப்போது படை வலிமையும் மிகுதியாக இல்லை. நாம் தலைநகரத்திலிருந்து புறப்படும்போது நம்முடன் வந்த வீரர்களும் இப்போது இந் நகரத்தில் அங்கங்கே தனித்தனியாக மறைந்து வசித்து வருகின்றனர். அவர்களை ஒன்று திரட்டுவது இப்போது அவ்வளவு எளிதான செயல் அல்ல. அப்படியே ஒன்று திரட்டிக்கொண்டு நாம் எல்லோரும் சென்றாலும் நேருக்கு நேர் நின்று போர் செய்து பகைவர் படையெடுப்பை நம்மால் முறியடிக்க முடியாது. எனவே தந்திரத்தால்தான் இந்தப் பகைவர்களை இப்போது