பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/222

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



42. மித்திர பேதம்

சோலைமலைமேல் வந்து கூடிய அந்த வீரர்களுள், முன்பு யூகியோடு உஞ்சை நகரிலிருந்து தத்தையுடனே உதயணன் மீள்வதற்கு உதவி செய்த வீரரும் பலர் இருந்தனர். பிரச்சோதனது மிகப்பெரிய படையை ஒரு சிலராகவே தனியே நின்று எதிர்த்த அந்த வீரர்களிடம், உருமண்ணுவா தங்களுடைய திட்டத்தைக் கூறினான். அவர்களோ, “இது படையாகவே எங்களுக்குத் தோன்றவில்லை. காக்கைக் கூட்டம்போலப் பலர்கூடி அல்லவா படையெடுத்து வந்திருப்பார்கள் போலிருக்கிறது! முன்பு பிரச்சோதனனின் பெரும் படையையே எளிதில் வென்ற நாம், இப்போது இவர்களைத் துரத்திவிட்டு அதனால்_தருசகன் நட்பைப் பெற்றுக் கொள்வது நமக்கு மிக எளிதாக முடியக்கூடியதே.” என்று கூறி இத் திட்டத்தை வரவேற்றனர். வாணிகர்களாக மாறுவேடத்திற் சென்று, இரவோடு இரவாகக் கலவரம் செய்து அவர்களை ஓட்டி... விடலாமென்பதற்கு வீரர்கள் உறுதியாக ஒப்புக் கொண்டனர். இத் திட்டத்தை எல்லாரும் ஒப்புக்கொள்ளவே வாணிகர்களாக மாறுவேடம் செய்து கொள்வதற்குத் தகுந்த பொருள்களைச் சேகரிக்கும் கருத்துடன் மலையிலிருந்து யாவரும் கீழே இறங்கினர்.

எண்ணிக்கையில் நூற்றுக்கு மேற்பட்ட தொகையையுடைய அவர்கள் எல்லோரும், ஒரே விதமான வாணிகர்களாகவே சென்றால் பகைவர்கள் ஐயப்பட நேரிடும் என்பதற்காக, வாணிகர்களிலும் பலபல வாணிகங்களை நடத்தும் வேறுவேறு வாணிகர்களாகச் செல்லவேண்டும் என்று எண்ணினார்கள். அதற்குப் பற்பல விதமான வாணிபப் பொருள்கள் வகை வகையாகத் தேவையாயிருந்தன. பகைவர் பாசறையை நோக்கிப் புறப்படுவதற்குமுன் விரைவாக இவற்றைக் கவனித்து ஏற்பாடு செய்துகொள்ள வேண்டியிருந்தது. இதனால் மலையிலிருந்து இறங்கிய அன்றிரவு, பொழுது விடிந்ததுமே அவர்கள் இந்த ஏற்பாடுகளிலே