பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/225

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மித்திர பேதம்

223

கொள்ள அவர்களுக்கு அங்கே தனிமை அவசியமாக இருந்தது. ஆகையால் விரிசிகன் முதலிய பகையரசர்களின் வேண்டுகோளை மறுத்துத் தங்களுக்கு எனத் தனியாக ஒரு பாசறை அமைத்துக் கொடுத்தால்தான் வசதியாக இருக்கும் என்று அவர்களைக் கேட்டுக் கொண்டனர். அதன்படி அவர்கள் தங்குவதற்கென்று அதே எல்லைக்கு உட்பட்ட இடத்தில் தனிப்பாசறை ஒன்று அமைத்துக் கொடுக்கப் பட்டது. தனிப்பாசறையில் தங்கிய உதயணன் முதலியோர் ‘அங்கே தங்கியிருக்கும் பகையரசர்களின் தொகை, படைகளின் வலிமை. தங்கள் சூழ்ச்சியால் அவர்களை ஓடச் செய்வதற்குப் பகல்நேரம் ஏற்றதா?’ இதே இரவு நேரம் ஏற்றதா?’ ஆகியவற்றைச் சிந்தித்து மேலே இயற்ற வேண்டிய செயல்களைப் பற்றித் தங்களுக்குள்ளே கூடி ஆராய்ந்தனர், சிந்தனைகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

இறுதியாக, நள்ளிரவில் அன்றே தங்கள் சூழ்ச்சியை நிறைவேற்றிப் பகையரசர்கள் ஓடிப்போகுமாறு செய்து விட்டுத் தாங்களும் தங்கள் கூடவே கொணர்ந்திருக்கும் குதிரைகளில் ஏறித் தலைநகருக்கு ஓடிவிடுவது என்ற முடிவுக்கு வந்தனர். இன்னஇன்ன இடத்தில் இப்படி இப்படிச் சூழ்ச்சியை நடத்த வேண்டும் என்பதையும், நள்ளிரவில் அதை நிகழ்த்த வேண்டிய முறையைப் பற்றியும் தெளிவாகப் பேசிக்கொண்டனர். படையெடுத்து வந்திருக்கும் விரிசிகன் முதலாகிய ஆறு பகையரசர்களும் அந்த எல்லைக்குள்ளே தனித்தனியே அமைக்கப்பட்டிருந்த ஆறு பாசறைகளில் இருந்தனர். எனவே உதயணன் தன்னோடு வந்துள்ள மிகக் குறைவான தொகையினராகிய வீரர்களை ஆறு பகுதியாகப் பிரித்துக்கொண்டு அந்தச் சூழ்ச்சியை நடத்த வேண்டியதாய் இருந்தது. அவ்வாறே வீரர்களை ஆறு பகுதியாகப் பிரித்தனர். பகைவர்களின் ஒவ்வொரு பாசறைக்கு முன்பும் காவலர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பார்கள். ஆகையினால் அவற்றை முற்றுகையிட்டுச் சூழ்ச்சி புரிவதற்குச் செல்லும் வீரர்கள் முன்னெச்சரிக்கையோடு