பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/227

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மித்திர பேதம்

225

நடுங்கும் படியாக உதயணன் வீரர் இத்தகையதொரு சூழ்ச்சித் திறத்துடனே அந்தத் தாக்குதலை நடத்தினர். ஒற்றுமையோடு வந்திருக்கும் இந்த ஆறு அரசர்களும் ஒற்றுமை குலைந்து தனித்தனியே தத்தம் பாசறைகளிலிருந்து நாட்டுக்குத் திரும்பி ஒடவேண்டும் என்று கருதியே உதயணன் இந்தத் தந்திரமான வழியைத் தன் வீரர்களுக்குக் கூறியிருந்தான். இந்தச் சூழ்ச்சியினால் இருளில் பகைவர் படையைச் சேர்ந்த வீரர்கள் தங்களுக்குள்ளேயே போர் செய்துகொள்ளத் தொடங்கி ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு மடிந்து கொண்டிருந்தார்கள்

உதயணனும், அவனுடைய வீரர்களும், தோழர்களும் இந்த உள்நாட்டுக் கலவரத்தைப் பெருகி வளர வழி செய்துவிட்டுத் தம் குதிரைகளுடன் அமைதியாக வந்த சுவடு தெரியாமல் திரும்பிச் சென்றுவிட்டனர். அயோத்தியரசன், விரிசிகன் தனக்கு வஞ்சகமிழைக்கத் திட்டமிட்டிருப்பதாக எண்ணிக் கொண்டான். விரிசிகனோ, அயோத்தி வேந்தன் தன்னைக் கொலை செய்யக் கருதியே நள்ளிரவில் அவன் வீரர்களைத் தன் பாசறைக்கு அனுப்பியதாக எண்ணி அவன் மேலே வன்மம்கொண்டு நெஞ்சு குமுறினான். இப்படியே ஒவ்வொரு அரசனும் தங்களுக்குள்ளேயே மற்றொருவனை எதிரியாக எண்ணி மனங்கொதித்தனர். அவர்கள் படை வீரர்களும் அதே மனக்கொதிப்போடு, பெரிய புயலினால் அலைமோதும் கடல் போலத் தங்களுக்குள்ளேயே போரிட்டுக் கொண்டிருந்தனர். இறுதியில் ஒவ்வொரு அரசனும் தன் தன் படைகளுடன் பாசறை முதலியவற்றைக் கிடந்தது கிடந்தபடியே போட்டுவிட்டுத் திரும்பித் தன் நாட்டை நோக்கி ஓடலானான். பொழுது விடிவதற்குள் அவர்கள் பாசறைகள் இருந்த இடம் வெறும் பாலைவனமாகி விட்டது.

முதல்நாள் இரவு சூழ்ச்சிப் போரில் மாண்டவர்களின் பிணங்களை விருந்துண்ண வந்த கழுகுகளைத் தவிர அங்கு வேறு யாருமில்லை. ஒன்றுபட்டு வந்திருந்த ஆறு பேரரசர்

வெ.மு- 15