பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/228

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

226

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

களின் உறுதியையும் ஒற்றுமையையும் வலிமையையும் ஒரே ஓர் இரவிற்குள் தன் சூழ்ச்சியால் அழித்திருந்தான் உதயணன். ஒடிய வேந்தர்கள் யாவரும் தற்செயலாக ஒரு மலையடிவாரத்தில் மீண்டும் சந்திக்க நேர்ந்தது. தாங்கள் யாவரும் நன்றாக ஏமாற்றப்பட்டிருப்பதை அப்போது அவர்கள் புரிந்து கொண்டனர்.

43. தருசகன் புகழுரை

டையெடுத்து வந்திருந்த பகை மன்னர்களுக்குள் கலவரத்தை மூட்டிவிட்டபின் ஏற்கெனவே உதயணன் எல்லாரும் சந்திக்க வேண்டுமென்று குறிப்பிட்டிருந்த இடத்தில் வத்தவநாட்டு வீரர்கள் ஒன்று கூடினர். அவ்வாறு அவர்கள் கூடியது இருள் நன்றாகப் புலராத நேரத்தில். ஆகையால் ‘வத்தவன் வாழ்க!’ என்ற அடையாளக் குரலால் தங்களை இனம் புரிந்துகொண்டு ஒன்று பட்டிருந்தனர். அந்த வீரர்களில் ஒருவருக்கேனும் போரினால் ஒரு சிறு இரத்தக் காயம்கூட இல்லை. அவ்வளவு சாமர்த்தியமாகச் சூழ்ச்சியை நிறைவேற்றி விட்டுத் தப்பி வந்திருந்தனர் அவர்கள். ‘பகைவர்களைத் தந்திரமாக ஓட்டிவிட்டோம். இனி உதயணனுக்குத் தருசகன் நட்பு சுலபமாகக் கிடைத்துவிடும். பதுமையின் காதலிலும் இதனால் உதயணன் வெற்றி பெற முடியும்’ என்று உருமண்ணுவா முதலிய தோழர்கள் எண்ணினார்கள். உதயணன் அங்கு வந்திருப்பதையும், இரவோடிரவாக அவன் தன் ஆட்களுடனே தருசகனை வளைக்க வந்த பகைவர்களைத் துரத்திவிட்டதையும் நகர் எங்கும் வலியப் பரப்புதல் வேண்டும் என்று அவன் நண்பர் எண்ணினர். அப்படிச் செய்வது தருசகனுடைய கவனத்தையும் பாராட்டையும் உதயணனுக்குக் கிடைக்க வைப்பதற்குச் சிறந்த வழி என்று அவர்களுக்குத் தோன்றியது.

பதுமையும், தருசகன் நட்பும் உதயணனுக்குக் கிடைக்க வேண்டும் என்றால் உதயணனைப் பற்றி மகத வேந்தனாகிய தருசகனுக்கு மிக்க நன்மதிப்பு ஏற்பட வேண்டும். அதற்குரிய