பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விதி வென்றது

21

தலையை வெளியே நீட்டின. தாய்ப்பால் உண்ணும் பருவத்தில் தலைமை பூண்டு, அரசாள வந்த மிகவும் இளம் பருவத்து அரசன் போல வானிற் பிறைமதி தோன்றியது.

மாலை முற்றி இரவு தோன்றும்படியான அழகிய நேரம். மகளிர் சந்தனத்தின் ஈரம் புலர்த்தும் அகிற்புகை எங்கும் பரந்தது. தத்தம் குழந்தைகளை உறங்கச் செய்வதற்காக மகளிர் கூறும் பொய்க் கதைகளின் ஒலி ஒருபுறம். எங்கும், இடை இடையே ஒளிபரப்பும் பாண்டில் விளக்குகள் ஏற்றப்பட்டன. உதயணன் நேரமாகிவிட்டதை உணர்ந்து அரண்மனைக்கு வந்து சேர்ந்தான். இரவு உணவு முடிந்தபின் தனக்கென அமைக்கப்பட்ட மணிக்கால் அமளியில் துயிலச் சென்றான். தூக்கம் எங்கிருந்து வரும்? தூக்கம் வருவதற்குப் பதில் வாசவதத்தையின் கவின்முகம் மானசீகமான உரு வெளியில் தோன்றி அருகே வந்தது. அழகு என்பது இவ்வாறு இருக்க வேண்டும் எனத் தேவர்கள் ஒன்றுகூடித் தீட்டிய தெய்வ ஓவியம் போன்ற தத்தையின் உருவைத் தன் மனத்தில் அழியாமல் எழுதிவிட முயன்றான் உதயணன். ‘அன்று புலிமுக மாடத்தில் தன் வேல்விழியைக் கருவியாகக் கொண்டு என் உள்ளங்கவர்ந்த கள்ளியிடமிருந்து உள்ளத்தோடு அவள்பாற் சென்ற என் ஆண்மையை நான் பெற முடியுமோ?’ என்று மாணிக்கப்படுக்கைமேல் தூக்கமின்றித் தனிமைத் துன்பம் வாட்ட அதற்கு ஆளாகிய உதயணன் ஒன்றும் புரியாது அமர்ந்திருந்தான்.

உதயணன் மட்டுமா இத் துயருக்கு ஆளானான்? இல்லை! இல்லை! இப்போது வாசவதத்தையின் கன்னி மாடத்திற்கு வருவோம். இதோ அவளும் காதல் காரணமாக விளைந்த தனிமைத் துன்பத்துக்கு இலக்காகத் தவறவில்லை என்று அவள் தோற்றத்தைக் கண்டே அறிந்து கொள்ளலாம். உதயகிரியின் உச்சியில் தோன்றும் இளங்கதிரவன்போல நளகிரியின் மேலமர்ந்திருந்த உதயணனைக் கண்டதும் அவள் நெஞ்சு அவன்பால் அடைக்கலம் புகுந்துவிட்டது. நெஞ்சை உதயணனிடம் பறிகொடுத்துவிட்ட அவள் கன்னிமாடத்