பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/232

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

230

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

என்றே இதில் தங்களைச் சேராத பிறரது சூழ்ச்சி ஏதோ கலந்திருக்கிறது’ என்று தோன்றியது. விரிசிகன் தனக்குத் தோன்றிய இந்த எண்ணத்தைத் ‘தீர விசாரித்து, உண்மையைத் தெரிந்து கொள்வது நல்லது’ என்ற முடிவிற்கு வந்தான். சிரம சாத்தியமான முயற்சியின் பயனாக அந்த மலையடி வாரத்திலேயே ஆறு அரசர்களையும் படைகளோடு தங்கச் செய்து ஒன்று கூட்டினான். அரசர்கள் ஆறு பேரும் தனியே ஒரு பெரிய மரத்தின் நிழலில் தங்கி, முதல் நாள் இரவு நடந்த கலவரங்களைப் பற்றிப் பேசத் தொடங்கினர்.

முதலில் தங்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டு பேசிய அவர்கள் பேச்சு வளரவளரத் ‘தங்களில் யாருமே முதல் நாளிரவு நிகழ்ச்சிக்குக் காரணமில்லை’ என்ற திடுக்கிடத்தக்க உண்மையைப் புரிந்து கொண்டனர். இறுதியில் முன் இரவில் கலவரம் முடிந்து தாங்கள் கலைந்த போதிலிருந்து குதிரை விற்பவர்கள் என்று கூறி வந்து தங்களோடு சேர்ந்து கொண்டவர்கள் காணாமற் போனது வரை அவர்களுக்கு எல்லா நினைவும் வந்தன. ‘குதிரை வாணிகர்களாக வந்தவர்களே இந்தக் கலவரத்திற்குக் காரணம். அவர்கள் தருசகனாலேயே அனுப்பப் பட்டிருக்கலாம்’ என்று எண்ணியபோது தாங்கள் அவ்வளவு எளிதில் சூழ்ச்சிக்கு ஆட்பட்டுவிட்டது அவர்களுக்கே வியப்பையும் வெட்கத்தையும் அளித்தது. அவர்கள் அஞ்சினர். ஆத்திரங் கொண்டு மீண்டும் அங்கேயே ஒன்று கூடி எழுந்தனர். அடக்க முடியாத ஆத்திரத்தோடு மறுபடி மகத நாட்டின் மீது படை எடுக்கத் துணிந்தனர்.

‘நாங்கள் குதிரை வியாபாரிகள். இப்போது தருசகனுக்குப் பகைவர்கள்’ என்ற பொய்யை மிகச் சாதாரணமாகக் கூறித் தங்களை நம்ப வைத்துவிட்டார்களே என்று எண்ணி எண்ணி மனங்கொதித்தனர். ‘இனி முற்றத் துறந்த முனிவர்களேயானாலும் சரி - அவர்களைப் படை நடுவில் விடக் கூடாது. தாங்களும் தங்கள் ஆறு பேருடைய படைகளும் தவிர வேறு எவருக்கும் உள்ளே இடங்கொடுத்து ஏமாறக்