பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/233

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஓடினோர் கூடினர்

231

கூடாது' என்று உறுதி செய்து கொண்டார்கள். ஏமாற்றப் பட்டவர்களின் மனக் கொதிப்பும் ஆத்திர வேகமும்தான் உலகிலேயே உவமை சொல்ல முடியாதவைகள். ஒன்று கூடி வந்த தங்களைக் கேவலம் ஒரே ஓர் இரவில் சிதறி ஓடச் செய்த சூழ்ச்சியை நினைக்க நினைக்க நெஞ்சு குமுறிய அவர்கள், பழைய முறைப்படி தத்தம் படைகளை அணி வகுத்துக்கொண்டு மீண்டும் மகத நாட்டு எல்லைக்குள்ளே விரைந்து புகுந்தனர். அமைதிக்கு இடமின்றிப் புயற் காற்றால் பொங்கியெழுகின்ற கடலைப்போல இருந்தது அவர்களது நிலை. இப்படி இரண்டாம் முறையாக அவர்கள் ஒன்றுபட்டு வந்தபோது அங்கங்கே தென்பட்ட அழகிய சோலைகளை இருந்த இடம் தெரியாமல் சூறையாடி அழித்தனர். கமுகு, வாழை முதலிய தோட்டங்கள் அவர்களது ஆத்திரம்மிக்க கைகளிற் சிக்கிச் சிதைந்தன. கருக் கொண்டிருக்கும் தாய் மகள்போலப் பசுமை தவழும் காய்களுடனே விளங்கும் பலா மரக் காடுகள் பாழ்பட்டன. மா மரங்களையும் தென்னை மரங்களையும் படைகளைச் சேர்ந்த யானைகள் ஒடித்துத் தள்ளின. கழனிகளில் முற்றியிருந்த நெற்கதிர்களுக்கு நெருப்பூட்டி விளைபொருள்களை நாசப்படுத்தி மகிழ்ந்தனர் அப் படைவீரர்கள். இந்தச் செய்தி வேகமாகத் தலைநகரத்துக்கு எட்ட வேண்டுமென்றே இப்படி எல்லாம் செய்தார்கள் அவர்கள்.

அஞ்சி ஓடிய பகையரசர்கள் மீண்டும் ஒன்று கூடிப் போர்புரிய வந்து கொண்டிருப்பது இராசகிரிய நகரத்தின் எல்லையிலுள்ள தன் ஒற்றர்கள் மூலம் தருசகனுக்குத் தெரியவந்தது. இச் செய்தி அறிந்ததும், ஒருமுறை கொடிய நோய் ஒன்றினால் துன்புற்று வருந்தியவன், அந் நோய் தீர்ந்த சில நாள்களிலேயே மறுபடியும் அக் கொடிய நோயால் பீடிக்கப்பட்டால் எப்படி இருப்பானோ, அப்படி இருந்தான், தருசக மன்னன். அப்போது, ‘அந்த நிலையில் உடனடியாக என்ன செய்ய முடியும்?’ என்பதே அவனுக்குத் தெரியவில்லை. தோற்று ஓடியவர்கள் ஒன்றுகூடி மீண்டும் திரும்பி