பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/239

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மறுபடியும் போர்

237

செய்திகளை, அவனிடம் கூறத் தொடங்கினான். “வயந்தக! இப்போது நான் கூறுவனவற்றைக் கவனமாகக் கேட்டுக் கொண்டு சென்று நீ உதயணனுக்குக் கூற வேண்டும். உதயணன் உன்னிடம் கூறி அனுப்பிய வேண்டுகோளின்படியே என் படைகளை அவனுடன் உதவிக்கு அனுப்புகிறேன். அதனுடன், என் தங்கையைத் திருமணம் பேசுவதற்காக வந்து இப்போது இங்கே என் விருந்தினனாகத் தங்கியிருக்கும் கேகய மன்னனும் போரில் கலந்து கொள்ள விரும்புவதால் அவனையும் அனுப்புகின்றேன். என் படைகளையும் கேகய மன்னன் அச்சுவப் பெருமகனையும் துணைகளாகக் கொண்டு நாம் வெற்றி அடையும்படியாகப் போரை நடத்த வேண்டும் என்று உதயணனிடம் நீ போய்க் கூறு. மேலும் கேகயத்தரசன் திருமணக் காரியமாக இங்கே வந்திருப்பதனால் போரில் அவனுக்கு எதுவும் தீங்கு நேர்ந்து விடாமல் அவனைக் காப்பாற்றும் கடமையும் உதயணனுக்கு உண்டு என்று நான் சொல்லியதாக அவனிடம் சொல்” என்று கூறித் தருசகன் வயந்தகனை அனுப்பினான்.

வயந்தகன் சென்ற பின்பு, மீண்டும் கேகயத்தரசனையும் தன் அமைச்சர்கள், படைத்தலைவர்கள் முதலியோரையும் அழைத்தனுப்பி அவர்களுடன் கூடி ஆலோசனைகள் சிலவற்றை நடத்தினான் தருசகன். ‘பகைவர் படையின் இரண்டாவது தாக்குதலும் தானாகவே தீர்க்கப்பட்டு விடும்’ என்று எண்ணி நம்பிக்கை கொள்ளும் அளவிற்கு உதயணன் வேண்டுகோளால் தருசகன் துணிவு அடைந்திருந்தான். படைவீரர்களை மேலும் மேலும் திரட்டுமாறு சேனாபதிகள் ஏவப்பெற்றனர். மகத நாட்டிற்குரிய பல்வகைப் படைகளும் போருக்கு எழுந்தன. கேகய மன்னனும் அந்தப் படைகளுடன் போருக்குச் சித்தமானான். உதயணனிடம் இருந்த சின்னஞ்சிறு படைத் தொகுதியும் மகத நாட்டுப் படைகளோடு கலந்து கொண்டன. உதயணன் தங்கியிருந்த பகுதிக்கு எதிரே அரண்மனை முற்றத்தில் எல்லாப் படைகளும் வரிசை வரிசையாக அணிவகுத்து நின்றன. உருமண்ணுவா, வயந்தகன், இசைச்சன் முதலியோர் நன்கு