பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

திற்குத் திரும்பியதும் ஆயத்தார்களை நீக்கித் திருமணி மாடத்தின் பகுதியில் ஓர் ஒதுக்குப்புறமாக அமர்ந்து உதயணனை நினைக்கத் தொடங்கினாள்.

உதயணனைப் பற்றியும் அவன் பேரழகைப் பற்றியும் மீண்டும் மீண்டும் நினைத்துக் கொண்டிருந்த வாசவதத்தைக்குத் தன் தந்தையாகிய பிரச்சோதனன் மேற்கூடக் கோபம் வந்துவிட்டது. வேற்று நாட்டிலிருந்து தன் கிளைஞரைப் பிரிந்து சிறைப்பட்டவன், தனியானவன் என்பதை எல்லாம் சற்றும் சிந்தியாது, ‘யாழோடு சென்று மத யானையை அடக்கு’ என்று அவருக்கு ஆணையிட்டாரே நம் தந்தை அவருக்குக் கண்களே இல்லையோ? ஒரு வேளை அவர் கண்கள் மரத்தாலாகிய உணர்ச்சியற்ற கண்களோ? என்று எண்ணினாள் தத்தை. அவள் மனத்தில் உதயணன் மேலெழுந்த காதல், பெற்ற தந்தையையும் பழிக்கும்படி செய்கிறது என்றால் அதன் விந்தையை எவ்வாறு விளக்க முடியும்!

தத்தை உதயணனையே எண்ணித் தாபமுற்று அமர்ந்திருக்கையில் பிரிந்திருந்த அவள் ஆயத்தார் வந்து சேர்ந்தனர். தத்தையின் மேனியில் வாட்டம், குழைவு முதலியன கண்டு பரபரப்படைந்து பலவகையாகப் பேணி அதைத் தீர்க்கும் முயற்சியில் ஆயம், செவிலி முதலியோருடன் ஈடுபட்டது. தத்தையின் தாபம் அதிகமாகியதே ஒழியக் குறையவில்லை. குளிருக்குச் சந்தனம் பூசினாற் போலாயிற்று. இரவு ஒரு வழியாக முடிந்தது. காலைப் பொழுது நன்கு விடிந்தது.

நல்லதானாலும் சரி கெட்டதானாலும் சரி, விதி எப்போதுமே தோல்வியடைவது இல்லை. விதி என்பது மனிதனுக்கு அப்பாற்பட்ட நியதியாக இருக்கும்போது அதை மனிதன் எவ்வளவுதான் முயன்றாலும் தோல்வி அடையச் செய்துவிட முடியுமா என்ன? உதயணன் வாசவதத்தை காதல், விதியின் கூட்டுறவு என்பதுபோல அமைந்துவிட்டது. அப்படியானால் அதன் வெற்றிக்கும் விதிதானே பொறுப்பாளி?