பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/250

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

248

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

டிருந்த முதுமகள் ஒருத்தி, இந்தச் செய்தியைக் கேள்விப்பட நேர்ந்தது. பதுமையை உதயணனுக்குத் திருமணம் செய்து கொடுக்கும் ஏற்பாடு நடந்து கொண்டிருப்பதாகக் கேள்விப் பட்டபோது, அந்த மகிழ்ச்சிக்குரிய செய்தியை விரைவிலேயே சென்று பதுமையிடம் கூற வேண்டும் என்ற ஆவல் அவளுக்கு ஏற்பட்டது. அவள் பதுமையின் அந்தப்புரத்தை நோக்கி விரைந்தாள். அந்த முதுமகள் தெய்வப் பிரசாதங்களுடன் பதுமை இருக்குமிடத்தை அடைந்தபோது தோழிப் பெண்கள் எவரும் அங்கு இல்லை. பதுமை மட்டும் தனியே அமர்ந்திருந்தாள். பதுமையின் அந்தத் தனிமை நிலையைக் கண்ட முதுமகள், தான் கேள்வியுற்றதைக் கூறுவதற்கு இது தான் ஏற்ற சமயம் என்று எண்ணிக் கொண்டாள்.

தெய்வப் பிரசாதங்களைப் பதுமைக்கு அளித்துவிட்டு முதியவர்கள் வாழ்த்தும் முறைப்படி, ‘பொலிக நங்கை!’ என்று அவளை வாழ்த்தினாள். “பதுமை! இப்போது நான் உனக்கு மிகுந்த மகிழ்ச்சி தரும் செய்தி ஒன்றைக் கூறப் போகிறேன். உன் தமையன் உனக்கு எல்லாவகையிலும் ஒத்த தகுதியுடைய மணவாளன் ஒருவனைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அந்த மணவாளன் எத்தகையவன் தெரியுமோ? தன் நிகரற்ற போர்க் கலைஞன். வத்தவநாட்டின் வேந்தன், யானையின் மதத்தையும் அடக்க வல்ல வினை வித்தகன். அவன்தான் உதயணன். அவனுக்கு உன்னை மணம் புரிந்து கொடுப்பதாக உன் தமையன் இன்று முடிவு செய்திருக்கிறார்” என்று பதுமைக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும் உணர்வை எதிர்பார்த்துக் கொண்டே முதுமகள் அவளை நோக்கிக் கூறினாள். இதைக் கேட்டவுடன் தீயை மிதித்து விட்டவள் போலத் திடுக்கிட்டாள் பதுமை. மாணகனைத் தன் உயிரினும் மேலாகக் கருதி அவனுக்குத் தன் உள்ளத்தில் இடமளித்துவிட்ட அவள் உதயணனையும் எப்படி எண்ண முடியும்? பதுமையின் உள்ளம் துணுக்குற்று நடுங்கியது.

தன்னுடைய மனநடுக்கத்தையும் அச்சத்தையும் புறத்தே காட்டிக்கொள்ள விரும்பாத பதுமை சிரிப்பும் மலர்ச்சியும்